மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தன் வாழ்க்கையில் இறுதியில் ஊழலில் நம்பர் ஒன்னாக இருந்தார் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் மிகக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுலும் மோடியைக் கடுமையாக விமர்சித்துவருகிறார். இருவரின் வார்த்தைப் போரால் வட இந்திய தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அந்தப் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசினார் மோடி.
 “என்னுடைய மதிப்பை குறைக்கும் வகையில் ராகுல் காந்தி ரஃபேல் விவகாரத்தைப் பேசிவருகிறார். அதில் ஆதாரமின்றி என்னை குற்றம் சாட்டிவருகிறார். ஆனால், உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) எப்படிப்பட்டவர்? அவரை நேர்மையானவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன். ஆனால், அவர் தன் வாழ்நாளின் இறுதியில் ஊழலில் நம்பர் ஒன்னாக மாறினார். 
எனது செல்வாக்கை சிதைத்து, என்னை சிறுமைப்படுத்த விரும்புபவர்கள், இந்தியாவில் பலவீனமான அரசு அமைய வேண்டும் என நினைக்கிறார்கள். மோடி பிறக்கும்போது வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை. தங்க தட்டில் பிறந்து வளரவில்லை” என்று ராகுலை விமர்சித்து பேசினார்.


இதற்கிடையே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது சுமத்தப்பட்ட போபர்ஸ் ஊழல் வழக்கை வைத்து மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியைப் பற்றி மோடி அவதூறாகப் பேசியுள்ளார். போபர்ஸ் ஊழல் வழக்கில் ராஜீவ் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், ராஜீவ் லஞ்சம் பெற்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

 
இது மோடிக்கு நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை. மோடி எதையும் படிப்பதில்லை என நினைக்கிறேன். இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டாம் என முடிவெடுத்தது பாஜக ஆட்சிதான் என்பதாவது மோடிக்குத் தெரியுமா?” என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.