தேர்தல் தடைக்கு முன்பே 68% இடங்களில் உ.பியில் பிரச்சாரத்தை முடித்த மோடி-ஷா-யோகி.. கதி கலங்கும் எதிர்கட்சிகள்.
குறிப்பாக இந்த பேரணிகள் பிரச்சாரங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, அதிலும் அரசு செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் 68 சதவீத பிரச்சாரத்தை ஏற்கனவே பாஜக நிறைவு செய்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் கால் பங்கு அளவுக்கு கூட பிரச்சாரத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே பாஜக தலைவர்கள் மோடி அமித்ஷா யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்தரபிரதேச மாநிலத்தில் 68 சதவீத இடங்களில் பிரச்சாரத்தை நடத்தி முடித்து உள்ளனர்.ஆனால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விஷயத்தில் கோட்டை விட்டுள்ளன. அப்படி எனில் முன்கூட்டியே பாஜகவிற்கு தேர்தல் ஆணையத்தின் அட்டவணை தெரியுமா? என்ற கேள்வியையும் சில ஊடகங்கள் முன் வைத்துள்ளன.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலம் என்பதால் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது. உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவது நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமாகவும் கருதப்படுவதால் அனைத்து கட்சியினரும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மீண்டும் ஊ.பியில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்கான பல்வேறு உத்திகளை பாஜக தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இதேநேரத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக மாறியுள்ளது. நோய்த் தொற்றுக்கு மத்தியில் தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியம் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. வேட்பாளர்கள் ஆன்லைன் மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அரசியல் கட்சிகள் டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தை நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இது பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் முன்கூட்டிய சுதாரித்துக் கொண்ட பாஜக, உத்தரபிரதேசம் முழுவதும் ஜெட் வேகத்தில் தனது பிரச்சாரத்தையும் நிறைவு செய்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பேரணி, ரோட் ஷோ, பொதுக்கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி முடித்துள்ளனர். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆகியோர் 3 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 2 பேரணி அடிகள் அல்லது சாலை நிகழ்ச்சிகள் (ரோட் ஷோ) நடத்தி உள்ளனர்.
இதை சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தோமென்றால் அதன் எண்ணிக்கை 68% ஆகும். இந்த மூன்று தலைவர்களும் உத்தரபிரதேச மாநிலத்தில் கிட்டத்தட்ட 403 தொகுதிகளில் 275 தொகுதிகளில் ஏற்கனவே பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளனர். குறிப்பாக இந்த பேரணிகள் பிரச்சாரங்கள் அனைத்தும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, அதிலும் அரசு செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் 68 சதவீத பிரச்சாரத்தை ஏற்கனவே பாஜக நிறைவு செய்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதில் கால் பங்கு அளவுக்கு கூட பிரச்சாரத்தை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அகிலேஷ் யாதவின் பேரணி கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி பிரச்சாரத்தை ஒரு இடத்தில் கூட தொடங்கவே இல்லை, ஆனால் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பினர் ஆங்காங்கே பல்வேறு பிரச்சனைகளுக்காக தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.
மொத்தத்தில் பாஜக இந்த விவகாரத்தில் விழிப்புடன் இருந்து ஏற்கனவே பிரச்சாரத்தை நிறைவு செய்திருப்பது அந்த கட்சிக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்நிலையில் சில ஊடகங்கள் மிகத் துல்லியமாக இந்த அளவுக்கு பாஜக திட்டமிட்டு பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளது என்றால், ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் அட்டவணை பாஜகவுக்கு தெரியுமா? அல்லது இது எதேச்சையாக நடந்த ஒன்றா? என பொதுமக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விட்டுள்ளன. மொத்தத்தில் உத்தரபிரதேச மாநில கட்சிகள் முன்னெடுத்த வியூகங்கள், பாஜகவின் பிரச்சாரம் போன்றவை எந்த அளவிற்கு எடுபட்டது என்பது மார்ச் 10ஆம் தேதி அன்று தெரிந்துவிடும். அதுவரை காத்திருப்போம்.