மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.

 

மாநாட்டில் பேசிய அவர் வங்கமொழியில் தனது உரையை தொடங்கினார். பின்னர் பேசிய அவர், ‘’விவேகானந்தருக்கு நினைவு இல்லம் கட்டிய மாநிலம் தமிழகம். அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என தமிழகத்திற்கும் கொல்கத்தாவுக்கும் நெருங்கியஃ தொடர்புகள் உள்ளன. தமிழகத்துடன் திண்டுக்கல் - கொல்கத்தா நெடுஞ்சாலை இணைத்து வைத்துள்ளது. மம்தா பானர்ஜி இரும்புப்பெண்மணி. இந்த பொதுக்கூட்டத்தின் முக்கிய நோக்கமே பாஜகவை வீழ்த்த வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவில் நாம் வேறு வேறாக இருக்கலாம். இருப்பினும் நமது நோக்கம் ஒன்றுதான். மோடியை வீழ்த்தியே ஆக வேண்டும். சில மாதங்களுக்கு முன் மோடி தனக்கு எதிரியே இல்லை... பாஜகவுக்கு எதிர்கட்சிகளே கிடையாது எனக் கூறி வந்தார்.

ஆனால், இப்போது எதிர்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார். நாம் ஒன்று சேர்வது மோடிக்கு பயமாக இருக்கிறது. அதனால் தான் நம்மை திட்டுகிறார், புலம்புகிறார். நம்முடைய ஒற்றுமை மோடியை பயம் கொள்ள வைத்துள்ளது. எனக்கு உதவுகிறார் என்பது முக்கியமல்ல. நாட்டுமக்களுக்கு மோடி உதவுகிறாரா என்பதுதான் முக்கியம். மோடியின் இந்த ஆட்சி காப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான ஆட்சி. இந்த அரசாங்கத்தை பிரைவேட் கம்பெனியாக மாற்றிவிட்டார். நீரவ் மோடி, விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை தப்ப வைத்ததில் ஊழல் இல்லையா?

500, 1000 ரூபாய் புதிய நோட்டுகளை வெளியிட்டு மக்களை வஞ்சித்ததில் ஊழல் இல்லையா? அதை யாருடைய நலனுக்காக செய்தார்? அப்படிப்பட்ட மோடி ஊழலை பற்றி பேசலாமா? அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதை போல மோடி ஆட்சியில் ஊழலும் ஒரே இதில் குவிந்து கிடக்கிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்.  நான் ஆட்சிக்கு வந்தால் பாலாறு ஓடும் தேனாறு ஓடும் என வாக்குறுதிகள் அளித்தார். ஒவ்வொருவருக்கும் 15 லட்சத்தை வங்கிக் கணக்கில் போடுவேன் எனக்கூறினார். ஆனால், மக்களின் தலையில் கல்லை போட்டார். வாயில் மண்ணைப்போட்டார். மொத்தத்தில் குழியில் தள்ளி விட்டுவிட்டார்.

டீசல், சிலிண்டர், பெட்ரோல், குடிசைகளில் வாழ்வோர் எண்ணிக்கை என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது. உலகம் சுற்றும் பிரதமரின் சாதனை இதுதானா? ஆகவே மோடி ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்’’ என அவர் கேட்டுக் கொண்டார்.