கடந்த மாதம் 23 ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலமாக உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நள்ளிரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார். அதன்படி ஏப்ரல் 14 ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை 9 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் மக்களிடம் உரையாற்ற இருப்பதாக அறிவித்தார்.

அதன்படி பிரதமர் தற்போது உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, 'நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கிற்கு மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்திருக்கிறார்கள்.ஊரடங்கு உணர்வை மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ‘இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம். வரும் வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்து விட்டு டார்ச் லைட், அகல் விளக்குகளை எரிய செய்ய வேண்டும். அந்த நேரத்தில் அமைதியாக இருந்து நாட்டு மக்களை பற்றி சிந்தியுங்கள்' எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.