Asianet News TamilAsianet News Tamil

மண்டேலா நகரில் மோடியின் பொங்கல் விளையாட்டு!! ஃபைலோடு காத்திருக்கும் ஸ்டாலின்.. பரபரக்கும் அரசியல்

’விதி மிகப்பெரிய தோசைக்கரண்டி! அது தான் சுடும் தோசையை அப்படியே அலேக்காக திருப்பி போட்டுவிடும்.’

Modi Madurai visit creating political sensation
Author
Madurai, First Published Jan 2, 2022, 1:39 PM IST

’விதி மிகப்பெரிய தோசைக்கரண்டி! அது தான் சுடும் தோசையை அப்படியே அலேக்காக திருப்பி போட்டுவிடும்.’- என்று காமெடியாக ஒரு வசனம் அரசியலில் உண்டு.  அது இப்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க.வுக்குதான் நச்சுன்னு பொருந்திப் போகுது!

எப்படி?
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக இந்தியாவை ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசுடன் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு கொஞ்சமும் இணக்கம் இல்லை. வாஜ்பாய் காலத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மிக நெருக்கமான கூட்டணியை பா.ஜ.க.வுடன் வைத்திருந்ததுதான். ஆனால் அதன் பிந்தையை பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையில் புரிந்துணர்வானது துளியுமில்லை.

Modi Madurai visit creating political sensation

அதிலும், தமிழகத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த கடந்த பத்தாண்டு காலத்தில் மோடிக்கு எந்தளவுக்கு எரிச்சலை தரமுடியுமோ அந்தளவுக்கு தந்திருக்கிறது தி.மு.க. கூட்டணி. குறிப்பாக அவர் பிரதமராக பொறுப்பேற்று தமிழகத்துக்கு வந்த போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்று சோஷியல் மீடியாவில் வைரல் செய்வதும், கறுப்பு பலூன்களை பறக்கவிடுவதுமாக படுத்தி எடுத்துள்ளனர்.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பாக தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு அமைந்துள்ளது. அதன் பின்பாவது இறுக்கத்தை தளர்த்தினார்களா? என்றால், அதுதான் இல்லை. மத்திய அரசை! அதே பெயரில் குறிப்பிடாமல், ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லி சீண்டி வருகிறார்கள். இந்த விவகாரம் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வரையில் சென்று, அவர்களை கடுப்பாக்கியுள்ளது.

சூழல் இப்படியிருக்கும் நிலையில், வரும் 12-ம் தேதியன்று மதுரைக்கு வருகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தின் பதினோறு மருத்துவ கல்லூரி கட்டிடங்களை விருதுநகரில் இருந்து திறந்து வைக்க இருக்கிறார். இந்நிகழ்வில், மாநில முதல்வர் எனும் முறையில் ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். பிரதமர் விழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கிவிட்ட நிலையில், ‘கோ பேக் மோடி’ என்று சோஷியல் மீடியாவில் போடக்கூடாது என்று தி.மு.க.வினருக்கு ரகசிய கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ‘மோடி எங்களின் விருந்தாளி’ என்று தி.மு.க.வின் எம்.பி.யான ஆர்.எஸ்.பாரதியும் சொல்லிவிட்டார்.

இந்நிலையில், 12ம் தேதி பிரதமர் மதுரைக்கு வந்ததும் தமிழக பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மோடி பொங்கல்’ விழாவில் கலந்துகொள்கிறார். மதுரை மண்டேலா நகரில் நடக்கும் இவ்விழாவில் அவருடன் சேர்ந்து பத்தாயிரத்து எட்டு குடும்பங்கள் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மயிலாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் என்று களைகட்டப் போகுது மதுர. அங்கே பொங்கல் வைத்துவிட்டுதான் விருதுநகருக்கு அரசு நிகழ்ச்சிக்கு செல்கிறார் பிரதமர்.

Modi Madurai visit creating political sensation

இதற்கிடையில் மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கு வரவேண்டிய உதவிகள், சலுகைகள், உரிமைகள் பற்றி முதல்வர் கோரிக்கை ஃபைலை பிரதமரிடம் தருவார் என தெரிகிறது. இது உள்ளிட்ட உயர்மட்ட செயல்பாடுகளின் போது தங்களை உரசும் தி.மு.க. அரசு மற்றும் கூட்டணி பற்றி மோடி எவ்விதமான ரியாக்‌ஷன்களை, பதில்களை முதல்வரிடம் தருவார்? என்பதுதான் இப்போதைக்கு பரபரப்பே.

Follow Us:
Download App:
  • android
  • ios