தமிழகத்தை குறி வைக்கும் பாஜக.. நாளை சென்னை வரும் மோடியின் பயண திட்டம் என்ன.? யாரை சந்திக்கிறார்.?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடிகடந்த 4 நாட்களில் இரண்டாவது முறையாக தமிழகம் பயணம் மேற்கொள்கிறார். தென் மாவட்டங்களில் நடைபெற்ற நிகழ்வில் 3 தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டவர், நாளை சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
மோடியும் தமிழக பயணமும்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் வேகப்படுத்தி வருகிறது. பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் வட மாநிலங்களில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த தேசிய பாஜக தலைமை தீவிரமாக முயன்று வருகின்றது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் பிரதமர் மோடி 3 முறை தமிழகம் பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மோடியின் தமிழக பயண திட்டம் என்ன.?
இதனையடுத்து கடந்த 4 நாட்களில் 2 வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடியின் பயணத்திட்டம் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் நாளை மதியம் 1.15 மணியளவில் மகாராஷ்டிராவில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 2.50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதியம் 3:20 மணிக்கு கல்பாக்கம் சென்று சேர்கிறார். அங்கு கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை மோடி பார்வையிடுகிறார். இதனையடுத்து மாலை 4.30 மணியளவில் கல்பாக்கத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேர்கிறார்.
சென்னை பொதுக்கூட்டத்தில் மோடி
இதனையடுத்து சென்னை ஒ எம் சி நந்தனத்தில் பாஜக சார்பாக நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாலை 5 மணியளவில் கலந்துகொண்டு பாஜக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களை தொடர்பாகவும் பாஜகவினர் மத்தியில் உரையாற்றவுள்ளார். மாலை 6.20 மணிக்கு ஒய்எம்சி நந்தனத்திலிருந்து புறப்படும் அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்று சேர்கிறார். பிரதமர் மோடியின் தொடர் தமிழகம் பயணத்தால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 33 பேருக்கு சான்ஸ் தராத பாஜக!