உத்தரப்பிரதேச தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலிவான அரசியல் செய்வதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.
மோடி வல்லவர்
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று பேசியதாவது:-
பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பிரதமர் மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் கட்சியை மாயாவதி சொத்துக் கட்சி என்று கூறி மலிவான அரசியலில் ஈடுபடுகிறார்.
வார்த்தை ஜாலங்களில் மோடி வல்லவர். ஆனால் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி மோடிக்கு கொடுக்கப்பட்டு விடும். அதை அவரும் மறந்து விடுவார்.
ரூ. 100 கோடி
பகுஜன் சமாஜ் என்பது முதலில் ஒரு இயக்கம்; பின்னர்தான் அது ஒரு அரசியல் கட்சி. இந்த உண்மை மோடிக்கு தெரியாது. நான் எனது வாழ்க்கை முழுவதையும் தலித், ஒடுக்கப்பட்ட, முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து விட்டேன்.
3 மாதங்களுக்கு முன்பாக நாடு முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தினோம். அப்போது, செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கை கொண்டு வரப்பபடவில்லை.
அந்த சமயத்தில் கட்சி தொண்டர்கள் நன்கொடை செலுத்தினார்கள். அவர்களிடம் வசூலிக்கப்பட்ட பணம் 100 கோடி ரூபாயாக இருந்தது.
திவாலாக விருப்பம்
அதைத்தான் நாங்கள் டெபாசிட் செய்தோம். இது மோடியின் கண்களை உறுத்தியது. பின்னர் அவர்கள் இந்த தொகை எங்கிருந்து வந்தது என்று கேட்கிறார். நாங்கள் பெற்றது கருப்பு பணமாக இருந்தால், அதனை எதற்காக வங்கியில் டெபாசிட் செய்யப் போகிறோம்?.
மக்கள் அளிக்கும் நன்கொடையால் தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிடுவதை பாஜக விரும்பவில்லை.
தலித் பெண் ஒருவர் (மாயாவதி) ஹெலிகாப்டரில் பறந்து சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதையும் விரும்பவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி திவாலாக வேண்டும் என்று பாஜக விரும்புகிறது.
இவ்வாறு மாயாவதி பேசினார்.
