சமஸ்கிருத மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. சமஸ்கிருத மொழி திணிப்பை தமிழக முதல்வர் எதிர்க்கவில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.  

திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம் 2021’ சிறப்பு தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “மத்திய பாஜக அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை என்பது காவிக் கொள்கை ஆகும். இக்கொள்கை ஏழை, எளிய மாணவர்களின் ஆரம்ப கல்வியைக் கூட தடுக்க திட்டமிடப்படுகிறது. மத்திய அரசு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களின் உதவித் தொகையை நிறுத்துவது கல்வியை தடுப்பதற்கு சமம்.


வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகர் டெல்லி கடந்த 20 நாளாக நடுங்கிக்கொண்டிருக்கிறது. இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை ஆகும். ஆனால், அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இந்தச் சட்டம் மிகவும் நல்ல சட்டம் என மத்திய அரசு விவசாயிகளுக்கு பாடம் எடுக்கிறது. போராடும் விவசாயிகளை உள் துறை அமைச்சர் இதுவரை சந்திக்கவில்லை. இதற்கு என்ன காரணம்? வருகிற வெள்ளிக்கிழமை சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடைபெறுகிறது.