நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும் என பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 11,18,23,29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் பகுதிகளில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவத்தை தாழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இந்த தேர்தல் அறிக்கை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும் என்று கிண்டல் செய்தார்.
.
தற்போது இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றுவரும் இதே திடலில் வேறு மாநிலங்களை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து வந்து ஜனவரி 19-ம் தேதி உங்கள் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் என்னை ஒழிக்க வேண்டும் என்று அவர்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.

என்னை ஒழிப்பதற்கு ஏன் அவர்கள் ஒன்றுசேர வேண்டும். அவர்களுக்கு என்னை ஒழிக்க வேண்டியதன் அவசியம் என்ன? மோடி என்ன தவறு செய்து விட்டான்? ஏழைகளின் வீடுகளுக்கு இலவச மின்சாரம், கியாஸ் இணைப்புகளை வழங்கியது குற்றமா? அது குற்றம் என்றால் நான் குற்றவாளி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என பேசினார்..

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவர்களின் தேர்தல் அறிக்கை மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும். பிறகு எங்கள் ஆட்சியில் நமது படை வீரர்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும் எனவும் மோடி குறிப்பிட்டார்
