modi at gopalapuram stalin welcome
சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, இன்று காலை தனது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, திட்டமிடப்படாத திடீர் நிகழ்ச்சியாக, திமுக., தலைவர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்றார்.
இன்று காலை தினத்தந்தி நாளிதழின் 75ம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் பிரதமர் அலுவலக இணைச் செயலர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து, சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக, தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றார். உடல் நலம் குன்றி இருக்கும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்திருந்த அவரை, வாசலுக்கு வந்து வரவேற்றார் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். மோடிக்கு பொன்னாடை போர்த்தி, மகிழ்ச்சியுடன் வரவேற்று அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் மு.க. ஸ்டாலின்.
முன்னதாக மோடி செல்லும் வழியில் மக்கள் பெரும் திரளாகக் கூடி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கடற்கரைச் சாலையில் இரு புறமும் பெருமளவில் மக்கள் திரண்டு அவருக்கு கையசைத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
