மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று மதுரை வருகின்றனர். இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு படை டி.ஐ.ஜி., தலைமையில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று இரவு பசுமலை 'கேட்வே ஓட்டல்' தங்கவுள்ளதால் அந்த மலையைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக – பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாளை தேனி, ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். இன்று கேரளா கோழிக்கோட்டில் பிரசாரம் செய்துவிட்டு,விமானம் மூலம் இரவு 8:25 மணிக்கு மதுரை வருகிறார். கார் மூலம் பசுமலை சென்று அங்கு தங்குகிறார்.
இதையடுத்து அப்பகுதியில் குடியிருப்போரின் விபரம் சேகரிக்கப்பட்டுஉள்ளது. முன்எச்சரிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விமான நிலையத்தில் இருந்து மண்டேலா நகர், ரிங் ரோடு, கப்பலுார், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக ஓட்டலுக்கு பிரதமர் வருகிறார் அல்லது பெருங்குடி,அவனியாபுரம், தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், பழங்காநத்தம் வழியாகவும் வர வாய்ப்பு உள்ளது. இதற்காக தெற்குவெளிவீதியில் குண்டும், குழியுமாக இருந்த ரோடு நேற்று இரவு புதுப்பிக்கப்பட்டது.

விமான நிலையத்திற்கு பிரதமர் வந்ததும் அவர் செல்லும் வழியில் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது. தேவைக்கேற்ப போக்குவரத்து மாற்றமும் செய்யப்படும். தமிழகத்திற்கு அவ்வப்போது பிரதமர் வந்து சென்றாலும் சென்னை தவிர வேறு எங்கும் இரவு தங்கியதில்லை.
இந்நிலையில் அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் அவர் தங்குவது இதுதான் முதன்முறை. நாளை அதிகாலை யோகா பயிற்சியை முடித்துக்கொண்டு, காலை 9:55 மணிக்கு ஓட்டலில் இருந்து விமானநிலையத்திற்கு புறப்படுகிறார். அங்கிருந்து காலை 10:15 மணிக்கு ஹெலிகாப்டரில் தேனிக்கு செல்கிறார்.

அங்கிருந்து 11:50 மணிக்கு புறப்பட்டு பகல் 12:50 மணிக்கு ராமநாதபுரம் செல்கிறார். அங்கிருந்து பகல் 1:50 மணிக்கு புறப்பட்டு 2:40 மணிக்கு மதுரை வந்து, விமானம் மூலம் கர்நாடகா மங்களூரு செல்கிறார்.
இதே போல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரையில் பிரசாரம் செய்கிறார். இதற்காக காலை 11:30 மணிக்கு பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி வருகிறார். பகல் 1:15 மணிக்கு சேலம் ஹோலிகிராஸ் பள்ளிக்கு வந்து, மதிய உணவை முடித்துக்கொண்டு 2:00 மணிக்கு பொதுக்கூட்டம்நடக்கும் இடத்திற்குசெல்கிறார்.

மாலை 4:40 மணிக்கு ஹெலிகாப்டரில் தேனி வருகிறார். 5:40 மணி வரை பிரசாரம் செய்துவிட்டு மாலை 6:10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை வருகிறார். மண்டேலா நகர் பொதுக்கூட்டத்தில் மாலை 6:25 மணி முதல் இரவு 7:25 மணி வரை பேசிவிட்டு தனி விமானம் மூலம் பஞ்சாப் அமிர்தசரஸ் செல்கிறார். இரு தலைவர்களின் வருகையால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
