ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு மே-3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் வீட்டிலேயே மக்கள் முடங்கி இருப்பதால் மின்சார பயன்பாடு அதிகமாகி கொண்டே வருகிறது.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வீட்டில் மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரிப்பால், மின் கட்டணம் முன்பைவிட அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஏற்கனவே வேலையையும், வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இந்தக் கூடுதல் மின் கட்டணம் செலுத்துவது  கூடுதல் சுமையாகவே அமையும்.


மேலும் இந்த மின் கட்டணங்களை செலுத்த கால நீட்டிப்பு செய்து மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் 22.03.2020 முதல் 30.04.2020 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் அதற்கு முந்தைய கணக்கீட்டின்படி மின் கட்டணம் செலுத்தலாம் எனவும், இவ்வாறு செலுத்திய மின் கட்டணம் பின்வரும் கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரி கட்டல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மே மாதம் மின் பயன்பாடு கணக்கெடுப்பின்போது அதிகமான யூனிட்களை பதிவு செய்ய வேண்டியிருக்குமேயானால் கட்டணமும் அதிகமாகும். எனவே, ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.