Asianet News TamilAsianet News Tamil

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு..! 6 மணி நேரம் வாதாடிய தினகரன் வழக்கறிஞர்..! நவ., 24க்கு ஒத்திவைப்பு..!

MLAs disqualification case adjourned on november 24
MLAs disqualification case adjourned on november 24
Author
First Published Nov 20, 2017, 5:44 PM IST


தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, முதல்வர் பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு, குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திர பாபு, அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் வகையிலான வழக்குகளாக இருப்பதால் சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளையும் கூடுதல் நீதிபதிகள் அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார்.

தனி நீதிபதியின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகளையும் கடந்த 16-ம் தேதி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதையடுத்து அடுத்தகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. காலை 11 மணிக்கு வாதத்தை தொடங்கிய தினகரன் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, மாலை 5 மணி வரை 6 மணிநேரம் வாதாடினார்.

திமுகவுடன் இணைந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் செயல்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த வழக்கறிஞர் சிங்வி, முதல்வர் பழனிசாமிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்தான் முதலில் ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அதன்பிறகுதான் திமுக சார்பில் கொடுக்கப்பட்டது. எனவே திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது.

அதேபோல், முதல்வர் பழனிசாமிக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவை மீறி முதல்வருக்கு எதிராக வாக்களித்தது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏக்கள்தான். ஆனால் அவர்கள், பின்னர் முதல்வர் அணிக்கு மாறியதால் அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸிற்கு விளக்கம் அளிப்பதற்கு கால அவகாசமே கொடுக்காமல் தகுதிநீக்கம் செய்துள்ளனர் என வழக்கறிஞர் சிங்வி வாதிட்டார்.

சிங்வி, சுமார் 6 மணி நேரம் வாதிட்டார். இதையடுத்து வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி அமர்வு, வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அன்றைய தினம், தினகரனின் மற்றொரு வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் வாதிடுவார். சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் செயலரின் வழக்கறிஞர் வரும் 27-ம் தேதி வாதிட உள்ளார்.

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் விசாரணை முடிந்தவுடன், திமுக சார்பில் தொடரப்பட்ட முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரிய வழக்கு, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்க கோரிய வழக்கு உள்ளிட்ட மற்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios