ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறனை தொடர்ந்து எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன் சாதி சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறனை அடுத்து தற்போது நெட்டிசன்களிடம் சிக்கிவிட்டார் திமுகவின் ஐடி விங் மாநில செயலாளரும் மதுரை சட்டமன்ற உறுப்பினருமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், ஆமாம் அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய பேச்சு சர்ச்சையாகி வெடித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் நேற்று காலத்தின் குரல் விவாத நிகழ்ச்சியில், ‘மாநில அரசுக்குள் அத்துமீறித் தலையிடுகிறதா மத்திய அரசு?’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் காணொளி மூலம் பங்கேற்ற பழனிவேல் தியாகராஜன், “இன்றைய பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது கூட்டாட்சியின் சாம்பியனாக மத்திய அரசை நோக்கி பல கேள்விகளைக் கேட்டார். மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு குறுக்கீடு செய்வதாக சுமார் 15 அம்சங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவரே பிரதமரான நிலையில், நாங்களே எல்லாவற்றையும் பார்ப்போம் என்று சொல்கிறார். இது எனக்குப் புரியவில்லை, அம்பட்டன் கடையை கூட முடிவெட்டும் கடையைக் கூட டெல்லி சொல்வதன் பேரில் தான் திறக்க வேண்டும் என்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

இது தான் சர்ச்சைக்குரியதாகிவிட்டது. அம்பட்டன் என்பது முடி திருத்துபவர்களை கிராமங்களில் ஒரு காலத்தில் அழைத்த பெயர். இது மரியாதைக் குறைவாக இருப்பதாகக் கருதி இந்த சொல்லை பொதுவெளியில் யாரும் இப்போது பயன்படுத்துவதில்லை. மருத்துவர், நாவிதர், பார்பர், முடி திருத்துபவர் என்று அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் ராஜன், சலூன்களை, ‘அம்பட்டன் கடை’ என்று அழைத்திருப்பது அந்த சமுதாயத்தினரை அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்கள். பிடிஆர் பேசிய அந்த காட்சியை சமூகவலைத்தளங்களில் போட்டு முடி திருத்தும் சமுதாயத்தை அவமானப்படுத்திவிட்ட திமுக எம்.எல்.ஏ. என்றும் சமூக தளங்களில் வெச்சு தாறுமாறாக கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக இளைஞரணியினரின் கூட்டத்தில் பேசும்போது பிராமணர்கள், பட்டியலினத்தவர், பத்திரிகையாளர்கள் என்று சமூகத்தின் சகல தரப்பையும் மிகக் கடுமையாக விமர்சித்தார். பட்டியலினத்தோர் நீதிபதிகளானது திராவிட இயக்கம் போட்ட பிச்சை சர்ச்சையை கிளப்பிவிட்டு, திமுகவிற்கு பங்கம் ஏற்படுத்தினார்.

இதனையடுத்து தயாநிதிமாறன், தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்துவிட்டு வெளியே வந்து, ‘எங்களை மூன்றாந்தரமாக நடத்துகிறார். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா? என்று கேட்டு அடுத்த சர்ச்சையைப் பற்ற வைத்தார். தற்போது தயாநிதி மாறனின் இந்த சர்ச்சை பேச்சு ஓயாத நிலையில் மீண்டும் அடுத்த பீதியை கிளப்பிவிட்டுள்ளார் பழனிவேல் தியாகராஜன்.