அதிமுகவிற்கு குட் பாய் சொல்லிவிட்டு தினகரனுடன் முதலில் இணைந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்ட நிலையில் கள்ளக்குறிச்சி பிரபு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக செயல்பட்டு வந்தனர். அமமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு செயல்பட்டு வந்தார். அமமுக என்ற கட்சியை அரசியல் கட்சியாக தினகரன் பதிவு செய்த பிறகு மூன்று பேரும் அமமுக அடிப்படை உறுப்பினராகமல் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்துவந்தார்கள். 

இந்த 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தலைமை முயற்சி மேற்கொண்டது. சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவால் 3 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் தப்பியது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய பிறகு அறந்தாங்கி ரத்தினசபாபதியும் விருத்தாச்சலம் கலைச்செல்வனும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் தாய் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர். மேலும், பிரபுவும் முதலமைச்சரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறவில்லை. இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று பிரபு கடந்த மாதம் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இன்று மாலை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு சந்தித்து அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அமமுகவில் நிர்வாகிகள் வெளியேறி வருவதால் திக்கு தெரியாமல் டி.டி.வி.தினகரன் திணறி வருகிறார்.