பெங்களூரு மற்றும் திகார் சிறையில் இருக்கும், சசிகலா மற்றும் தினகரனை, அதிமுக எம்.எல்.ஏ க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் சந்தித்து பேசியது முதல்வர் எடப்பாடி தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது குறித்த முயற்சி தொடங்கியது. சசிகலா குடும்பத்தை, அரசியலை விட்டு முற்றிலும் ஒதுக்குவதாக கட்சியின் சார்பில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, சசிகலாவையும், தினகரனையும் அரசியலை விட்டு ஒதுக்கி விட்டதாக, அமைச்சர்கள் அறிவித்தனர். ஆனால், இதை ஏற்காத பன்னீர்செல்வம், இது தினகரானால் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகம் என்று கூறினார்.

மேலும், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாங்கிய பிரமாண பத்திரத்தில், சசிகலாவே பொது செயலாளர் என்று குறிப்பிட பட்டிருந்தது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் என்று குறிப்பிட்டு மாற்றமும் செய்யப்பட்டது.

இதனால், அணிகள் இணைப்பு என்பது, பேச்சு வார்த்தையை கூட முழுமையாக நடத்த முடியாத நிலையில், அப்படியே நின்று போனது. அத்துடன், என்னதான் சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டு ஒதுக்கியதாக அறிவித்தாலும், சில எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில், தினகரனின் தீவிர ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர் கடந்த 5 ம் தேதி, திகார் சிறையில் உள்ள தினகரனை சந்தித்து பேசியுள்ளனர். அத்துடன் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, பெரம்பூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் கடந்த 7 ம் தேதி சந்தித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ வெற்றிவேல், ஒரு தொண்டன் என்கிற முறையில், கட்சியின் பொது செயலாளர், துணை பொது செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாக கூறினார்.

மேலும்,  ஜெயலலிதாவுக்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவன்.  ஆர்.கே. நகரில் போட்டியிட்ட  தினகரனுக்காக கடுமையாக உழைத்தவன். கட்சி தொண்டர் என்ற உரிமையில் சென்று பார்த்தேன். பேசினேன் இதில் என்ன தவறு என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், மதுரையில் முதல்வர் எடப்பாடி பங்கேற்ற நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு, திகார் சிறையில் உள்ள தினகரனை சந்தித்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.

கட்சியை விட்டு சசிகலா, தினகரனை ஒதுக்கி வைத்ததாக அமைச்சர்கள் அறிவித்த பின்னரும், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் ஆகியோர், அவர்களை சந்தித்து பேசியது, எடப்பாடி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

எனினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  முடியாத நிலையில் இருக்கிறார் எடப்பாடி. தற்போதுள்ள நிலையில், அந்த இரு எம்.எல்.ஏ க்கள் மீது நடவடிக்கை எடுத்தால், மேலும் சில எம்.எல்.ஏ க்களும் விலக நேரும். அதனால் ஆட்சியே கவிழ நேரும் என்பதால், எதுவும் செய்யமுடியாமல் தவித்து வருகிறார் எடப்பாடி.

சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் கட்சி மற்றும் ஆட்சியில் முழுமையாக தொடர்ந்து வருவதாக பன்னீர்செல்வம் கூறிய குற்றச்சாட்டு, இதன்மூலம் மீண்டும் உறுதிப்படுத்த பட்டுள்ளது. 

அதன் காரணமாகவே, சசிகலா குடும்ப ஆதிக்கம் இல்லாத அதிமுகவை உருவாக்கும் வகையில், தமிழகம் முழுவதும், பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து வருகிறார்.