mla meeting with CM edappadi

அதிமுக யார் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது என்பது குறித்து எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதிமுக இரண்டாக பிளவுற்று இரு அணிகளாக இயங்கி வந்த நிலையில் தற்போது மூன்றாக பிளவடையும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

இரட்டை இலை பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவிக்கு அதிமுகவை சேர்ந்த 34 எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி ஆட்சி கலைந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருந்த போது, எங்களால் ஆட்சிக்கு பங்கம் வராது என டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் உறுதி அளித்தனர்.

ஆனால் கட்சியை டிடிவியே வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் திளைத்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து இன்று சட்டசபையின் இரண்டாவது நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு டிடிவி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது, எம்,எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த சந்திப்பின்போது, டிடிவி தினகரன் கட்சி பணிகளில் ஈடுபட இடையூறு செய்யக் கூடாது என்றும், கட்சி அலுவலகம் செல்லும்போதும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் முதலமைச்சர் எடப்பாடியிடம் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், டிடிவி தினகரன் கட்சியையும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியையும் கவனித்துக் கொள்ள வேண்டும் எனக்கோரியும் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முன் வைக்க உள்ளதாக தெரிகிறது.