வேலூரில் நடிகரும் எம்.எல்.ஏ.மான கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். “மண்ணும்  இனம்சார்ந்த மொழி, அடையாளம் போன்றவற்றை அழித்தவர்களுக்கான ஆதரவாக இப்படம் இருந்தால் அதனை தமிழர்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும்.வெகுஜன உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது. முரளிதரன் கதையை வைத்து ஒட்டுமொத்த தமிழர்களின் மொழியையும் இனத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக திரைப்படம் எடுக்கப்பட்டால் அதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்துள்ளது. வரவுள்ள தேர்தலில் கள்ளர், மறவர் உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அங்கீகாரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை வழங்க வேண்டும். அவ்வாறு கோரிக்கைகளை ஏற்றுகொள்பவர்களுக்குத்தான் எங்கள் ஆதரவை தருவோம். அதிமுகவினர் ஒவ்வொருவரின் ரத்தத்தில் உள்ள உயிர் அணுக்களிலும் சசிகலா கலந்துள்ளார். ஜெயலலிதாவின் எல்லா நடவடிக்கைகளிலும் சசிகலா உள்ளார்.

 
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம். கூட்டணிக் கட்சி சின்னத்திலேயே போட்டியிடுவோம். கட்சியின் கட்டமைப்பு தனி சின்னத்தில் போட்டியிடும் அளவுக்கு இல்லை. என்னுடைய தொகுதியில் நான் வைத்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியுள்ளது. குடிமராமத்து திட்டங்கள் சிறப்பாக நடந்துள்ளன. அதிமுக ஆட்சியைப் பற்றி மக்களிடம் வெறுப்போ கோபமோ இல்லை” என்று கருணாஸ் தெரிவித்தார்.