லீக் ஆட்டங்களில் தொடர்ந்து செஞ்சுரிகளாய் அடித்து வந்த ஸ்டார் பேட்ஸ் மேன், செமி ஃபைனலில் டக் அவுட் ஆனது போல் நொந்து அமர்ந்துவிட்டார் டி.டி.வி. தினகரன். காரணம்? “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பு செல்லும்.” என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பு கூறியிருப்பதுதான். தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்புக்காக தமிழகமும், டெல்லியும் வெயிட்டிங்கில் இருந்தது. இந்நிலையில் தீர்ப்பு இன்று வருகிறது! என்பதை முன் கூட்டியே ஸ்மெல் செய்த டி.டி.வி. தரப்பு எம்.எல்.ஏ.க்கள் பலர் குற்றாலம் பக்கம் கரை ஒதுங்கினர்.

 

அங்கிருந்தபடி ‘தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும், ஆட்சி கவிழும், இங்கிருந்து கிளம்புகையில் கோட்டைக்குதான் செல்வோம், எங்களில் ஒருவர் முதல்வராவார்!’ என்றெல்லாம் ஏகப்பட்ட பில்ட் - அப்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தீர்ப்பு ஆளும் அணிக்கு சாதகமாக வர, எல்லாம் பணால் ஆகிவிட்டது. தீர்ப்பு வந்த நொடியில் இருந்து தினகரனின் கூடாரம் கலகலத்துவிட்டது! என்கிறார்கள். 

தீர்ப்பு இப்படி தினகரனுக்கு பாதகமாக வந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்று முன் கூட்டியே கெஸ் செய்து வைத்திருந்த ஆளும் தரப்பு, தீர்ப்பு வந்த நொடியில் யாரையெல்லாம் கன்வின்ஸ் செய்து மளமளவென தங்கள் பக்கம் இழுக்கலாம்? என்று ஸ்கெட்ச் செய்து வைத்திருந்தாம். அதன்படியே இதோ தூது படலம் துவங்கிவிட்டது. இனி மெல்ல ஒவ்வொரு விக்கெட்டாய் தினகரன் பக்கமிருந்து கழறும்! என்கிறார்கள். 

ஆளும் தரப்பை பொறுத்தவரையில் “இடைத்தேர்தலில் தினகரன் கட்சியான ‘அ.ம.மு.க.’ சார்பாக போட்டியிட வலுவாக ஒருத்தரும் இருக்க கூடாது.” என்பதுதானாம். அதை நோக்கியே காய் நகர்த்தல்கள் துவங்கிவிட்டது! என்கிறார்கள். இதற்கிடையில் ‘மேல் முறையீடு?’ என்று ஒரு குரல் கேட்க, தங்கதமிழ் செல்வன் முன்பே சொல்லியிருந்தது போல் தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக வந்தால் மேல் முறையீடு செய்ய மாட்டோம்! என்கிற நிலையே தொடரும் என்கிறார்கள். 

தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வந்தால் ஆளும் அணியை கவிழ்த்து விட மிகப்பெரிய கணக்குகள் காத்திருந்தன. இந்த காட்சிகளை கண்டு களிப்படைய ஸ்டாலினும் வெயிட்டிங்கில் இருந்தார். ஆனால் தீர்ப்பு அவரை அப்செட்டாக்கிவிட்டது. எடப்பாடியாரின் கணக்குப் படி தினகரனின் கூடாரம் காலியாகுமா? கவனிப்போம்.