என்னைப் பார்த்து சிரிக்காதீங்க… எடப்பாடி பழனிசாமியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்…
சட்டப் பேரவையில் அதிமுகவினர் யாரும் தன்னைப்பார்த்து புன்னகைக்க வேண்டாம் என திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது அவரது செயல்பாடுகளை ஸ்டாலின் பலமுறை புகழ்ந்து பேசியுள்ளார். சட்டப் பேரவையில் இவர்கள் இருவரும் பார்த்துக் கொள்ளும்போது ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி புன்னகை செய்து கொள்வார்.
அரசியல் நாகரீகம் நிறைந்த இந்த செயலை அனைவருமே பாராட்டினர். சட்டப் பேரவையின் நல்ல மாண்பு இது என இருவரையுமே புகழ்ந்தனர்.
ஆனால் இந்த செயலை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ரசிக்கவில்லை.. அதிமுக அரசை கவிழ்க்க ஸ்டாலினும், ஓபிஎஸ்ம் சசி செய்கின்றனர் என சசிகலா குற்றம்சாட்டினார்.
இப்படியே விட்டால் ஜெயலலிதாவின் ஆட்சி பறிபோய்விடும் என்றும், அதனால் தானே முதலமைச்சராகப் போவதாக கூறிய சசிகலா, அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டி, சட்டமன்ற குழுத் தலைவராக தன்னை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர் முதலமைச்சராக முயன்றபோது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்நிலையில் சேலத்தில் நடைபெறும் கட்சி விழாவில் கலந்து கொள்வதற்காக ரயில் மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலை புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தன்னைப்பார்த்து சிரித்ததால் தான் ஓபிஎஸ் முதலமைச்சர் பதவி இழந்தார், எனவே தற்போது புதிதாக முதலமைச்சராகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி, எந்த காரணத்தைக் கொண்டும் தன்னை பார்த்து சிரித்து வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் தற்போது பதவியேற்றுள்ள அரசு மக்கள் விரோத அரசு எனவும் ஸ்டாலின்தெரிவித்தார்.
