ஓப்பனாய் சொல்வதென்றால் கஜா புயலை எதிர்கொள்ளும் விஷயத்தில் எடப்பாடியார் அரசு ஜமாய்த்துவிட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராஜ உதயகுமார் மிக லாவகமாக இயங்கியதன் மூலம் அதிஅசுர கஜா புயலை மிக குறைந்த உயிர் சேதத்துடன் கடந்திருக்கிறோம். பொருட்சேதத்தை தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும் கூட, பணம்! நகை! ஆவணங்கள்! ஆகியவற்றை அரசின் தொடர் எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டனர் மக்கள் என்பதே உண்மை. 

கஜாவை ஃபேஸ் பண்ணுவதில் அழகாக ஸ்கோர் செய்திருக்கும் தமிழக அரசை, பிற கட்சிகள் மனவ் விட்டு பாராட்டியுள்ளன. அதிலும் அ.தி.மு.க.வினரால் நிதமும் நிந்திக்கப்படும் எதிரிக்கட்சியான தி.மு.க.வே பாராட்டியதுதான் அழகு. அதன் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினே அரசை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார். 

ஆனால் அதே வேளையில், அவரது தங்கையான தி.மு.க. மகளிரணி மாநில தலைவியான கனிமொழி எம்.பி. தனது அண்ணனின் கருத்திலிருந்து எதிர் நிலைப்பாடு எடுத்ததுதான் அதிர்ச்சியே. ஸ்டாலின் தனது அறிக்கையில், “வானிலை ஆய்வு மையம், புயல் எச்சரிக்கை வெளியிட்டதும், தமிழக பேரிடர் மேலாண்மை வாரியம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. இதன் தொடர் நடவடிக்கைகளுக்கு, ஆட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.” என்று தட்டிக் கொடுத்துள்ளார். 

ஆனால் கனிமொழி எம்.பி.யோ...’கஜா புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.” என்று எடப்பாடி அரசின் தோள்களில் விழுந்த வாழ்த்துப் பூக்களை தட்டிவிட்டுள்ளார். கனிமொழியின் எதிர்மறை அதிரடியை பார்த்து அ.தி.மு.க.வினர் மட்டுமல்லாது தி.மு.க.வினருக்கும் ஷாக். இருந்தாலும்  சமாளித்துக் கொண்ட ஆளுங்கட்சியினர் “உண்மையை மனம் திறந்த பாராட்டிய ஸ்டாலினுக்கு நன்றி. ஆனால் கட்சியின் தலைமை பதவியிலிருக்கும் அவராலேயே உயர் நிர்வாகிகளை கட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்பது தெரிகிறது.

 

என்னதான் தங்கையாக இருந்தாலும் கூட, கழக தலைவர் எனும் முறையில் ஸ்டாலின் எடுத்துவிட்ட நிலைப்பாட்டை ஆதரித்திருக்க வேண்டும். அதைவிட்டு, அதற்கு நேர் எதிராக செயல்படுவதென்பது அவர்களுக்குள் இருக்கும் ‘அதிகார ஈகோ’வை காட்டுகிறது!” என்கிறார்கள். தி.மு.க.வினரால் இதற்கு நெத்தியடி பதிலடி எதையும் தரமுடியவில்லை. ஹும்! கஜா புயலால் சென்னையில் சேதமில்லை! என்று யார் சொன்னது? இதோ ஸ்டாலினின் குடும்பத்தினுள் சேதாரம் விளைந்துள்ளதே.