இந்த கட்டுரையை அந்த அரதப்பழைய பழமொழியுடன் துவக்கலாம்!...’முதல் கோணல்! முற்றிலும் கோணல்!’என்று. இது தி.மு.க. - வி.சி.க. கூட்டணிக்கு செம்ம கச்சிதமாய்ப் பொருந்திப்போகிறது. 

என்ன பிரச்னை?....... கருணாநிதி இருந்த காலத்தில் தி.மு.க.வில் திருமாவளவனுக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. ’என் அப்பாவுக்கு நிகர்’ என்று கருணாநிதியை அவரும் கொண்டாடுவார். ஆனாலும் ஸ்டாலினுக்கும், திருமாவுக்குமான உரசல்தான் அக்கட்சியுடனான அரசியல் நட்பிலிருந்து திருமாவை விளக்க வைத்தது. விலகிய திருமா, கடந்த சட்டமன்ற தேர்தலில் நேராக அ.தி.மு.க.வுடன் இணைந்திருந்தாலும் கூட ஸ்டாலின் நொந்திருக்க மாட்டார். ஆனால் ‘மக்கள் நல கூட்டணி’ எனும் ஒன்றை வைகோவுடன் இணைந்து துவக்கி, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை  மார்ஜினில் தோற்கடிக்க தோள் கொடுத்துவிட்டார். 

தேர்தல் முடிவுகளுக்குப் பின் கருணாநிதியிடம் ஸ்டாலிடம் துரைமுருகன் சொன்ன வார்த்தை ‘வைகோவும், திருமாவும் இணைந்து துரோகம் செய்துவிட்டனர்.’ என்பதுதான். இது ஸ்டாலினின் மனதில் ஆழ பதிந்தது. சட்டமன்ற தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் அதே வைகோ மற்றும் திருமாவை தி.மு.க.வின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தியது. தானாக வந்து அவர்கள் கதவைத் தட்டினார்கள். பி.ஜே.பி. - அ.தி.மு.க. முரட்டுக் கூட்டணியை வீழ்த்திட, வேறு வழியே இல்லாமல் இவர்களை இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் ஸ்டாலின். 

 

ஆனாலும் கைகள் இணைந்தனவே தவிர மனங்கள் இணையவில்லை. தி.மு.க.வின் ஐ.டி. விங்க் அடிக்கடி திருமாவை சீண்ட, அதற்கு சிறுத்தைகள் சோஷியல் மீடியாவில் ஸ்டாலினை கிண்டலடிக்க என்று உரசல் உச்சத்திலேயே இருந்தது. ஆனாலும் கூட ஒரே கூரையின் கீழ்தான் இயங்கினர் இரு தலைவர்களும். வைகோ, திருமா மீது நேசம் வராத காரணத்தினால்தான் ’அவர்கள் எங்கள் நண்பர்கள், கூட்டணியெல்லாம் இன்னும் உருவாகவில்லை.’ என்று துரைமுருகன் இடையில் ஒரு வேட்டு வைத்தார். அதன் பிறகு வைகோவும், திருமாவும் வாரிச்சுருட்டிக் கொண்டு அறிவாலயத்துக்கு ஓடி, ஸ்டாலினை ‘மரியாதை நிமித்தமாக’ சந்தித்து, தேர்தல் கூட்டணியை உறுதி செய்தது எல்லாம் அப்படியொன்றும் சுயமரியாதையான அரசியல் இல்லை. 

அந்த நொடியில் இருந்தே கூட்டணி தலைவன்! எனும் முறையில் தி.மு.க. ஏக அதிகாரம் காட்டத் துவங்கியது என்றார்கள் விமர்சகர்கள். இந்நிலையில் தொகுதிப் பங்கீடுகள் முடிந்து பிரசாரம் துவங்கியது. அதன் பிறகாவது சுமூக நிலை உருவானதா? என்றால்....இல்லவே இல்லை. தி.மு.க.வினர் போட்டியிடும் தொகுதிகளில் வி.சி.க.வினரை பிரசாரத்துக்கு அழைக்கவுமில்லை, மதிக்கவுமில்லை, சொல்லப்போனால் கொங்கு பகுதிகளில் தங்களுக்கான பிரசாரத்துக்கு வி.சி.க. வரவே கூடாது! என்று தி.மு.க.வினர் சொல்லியதாக பெரும் பிரச்னை பரவியது. குறிப்பாக திருமா பேசிய பழைய வீடியோ ஒன்றை வைரலாக்கி, ‘திருமா பிரசாரம் தி.மு.க.வுக்கு தேவையில்லை.’ என்று பரப்பிவிட்டனர். இந்த விவகாரம் பற்றி எரிந்தது.

 

இந்நிலையில் நாடாளுமன்ற மற்றும் பதினெட்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், நான்கு சட்டசபை தொகுதிக்கான பிரசாரங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இப்போதும் திருமாவை பிரசாரத்துக்கு தி.மு.க. அழைக்கவில்லை! என்று ஒரு விமர்சனம் ஓடுகிறது. ‘தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகிகளை விட்டுத்தள்ளுங்கள். அவர்கள் எப்போதுமே திமிர்த்தனம் தலைக்கு ஏறியவர்கள்தான். ஆனால் அக்கட்சியின் தலைவரே எங்கள் தலைவரை மதிப்பதில்லையே! எங்கள் பிரசாரம் வேண்டாமென்றால், தலித் சமுதாய மக்களின் வாக்குகளும் வேண்டாமா?’ என்று பொங்கியிருக்கின்றனர் சிறுத்தைகள். இதுபற்றி வெளிப்படையாய் பேசியிருக்கும் திருமா...”எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்பது புரிந்ததும், எதிர்கட்சியினர் திட்டமிட்டு பரப்பிய வதந்திகளில் இதுவும் ஒன்று. இதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏதேதோ செய்து பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணி பிரசாரங்களில் வி.சி.க. கொடிதான் அதிகம் பறந்தது. 

பிரசார காலம் குறைவு என்பதால் என்னால் கூட்டணி கட்சிகளின் பிரசாரத்துக்காக எங்குமே போகமுடியவில்லை. டி.ஆர்.பாலு, செல்லக்குமார், த்மிழச்சி தங்கபாண்டியனின் கணவர் சந்திரசேகம், ஈ.வி.கே.எஸ். ஆகியோர் என்னை தொலைபேசியில் அழைத்தனர். ஆனால் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. இதுதான் உண்மை. இப்போது நான்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு எங்களை அழைக்கவில்லை! என்று ஒரு விமர்சனம் ஓடுகிறது. இது தொடர்பாக தி.மு.க. தலைவரோடு நான் இன்னும் பேசவில்லை. பேசி முடிவெடுப்பேன். 5 நாட்கள் ரம்ஜான் நோன்பு இருப்பது என் வழக்கம், மேலும் வெளிநாடு செல்லும் திட்டமும் உள்ளது. நேரம் இடம் தந்தால் பிரசாரத்திற்கு செல்வேன்.” என்று சொல்லியிருக்கிறார். 

 

இதைப் பிடியாய் பிடித்துக் கொண்ட விமர்சகர்கள் “சரி நாற்பது மற்றும் பதினெட்டு தொகுதி தேர்தல்களை விட்டுத் தள்ளுவோம். இப்போது நடக்கும் நான்கு தொகுதி பிரசாரத்துக்கு தன்னை ஸ்டாலின் அழைக்கவில்லை என்பது திருமாவின் வாய் வழியே வெளிப்பட்டுவிட்டது. இனி அழைத்தாலும் போவதற்கு அவருக்கு மனமில்லை என்பதும் புரிகிறது. ஆக வேண்டா விருந்தாளியாக விடுதலை சிறுத்தைகளை கூட்டணிக்குள் வைத்துக் கொண்டு, ஒதுக்கி வைத்து டார்ச்சர் செய்திருக்கிறது தி.மு.க. இது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது வெறும் அரசியல் கோபமென்றால், திருமாவோடு சேர்ந்து அன்று குழிபறித்த வைகோவையும் ஸ்டாலின் ஒதுக்கியிருக்க வேண்டும். திருமாவை மட்டும் ஒதுக்குகிறார்கள் என்றால், இது சாதிய பாகுபாடா?” என்று பற்ற வைக்கிறார்கள் பரட்டைகள்.