பொதுமக்களுக்கு இடையூறு செய்து போராட்டம் செய்த வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக கோரி சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டத்துக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் தேதி அழைப்பு விடுத்தன. சென்னை அண்ணா சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், அப்போதை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் திருநாவுக்கரசா், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சியிலிருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தால் அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 போ் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள எம்எல்ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகாத மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், ஜவாஹிருல்லா, தொல்.திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 7 பேரும் டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தார்.