பரம எதிரிகளாக இருப்பவர்கள் அடுத்த நிமிடமே நண்பர்களாகி விடுவது அரசியலில் மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வு. அப்படி டி.டி.வி.தினகரன் - மு.க.ஸ்டாலின் இருவரும் பொது வெளியில் சந்தித்துக் கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.  

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியல் களம் மாற்றமடைந்து வருகிறது. பரம எதிரிக் கட்சிகளாக களத்தில் நின்ற திமுக- அதிமுக நிர்வாகிகள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டாலே அவர்களது பதவி பறிபோகும் என்கிற பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், கருணாநிதி உடல் நலம் குன்றியபோது அதிமுகவை சேர்ந்த முக்கியத் தலைவர்வர்கள் கோபாலபுரத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்று நலம் விசாரித்தனர். 

அதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்... மு.க.ஸ்டாலினுடன் டி.டி.வி.தினகரன் ரகசிய நட்பு வைத்துள்ளார். திமுக- அமமுக மறைமுக கூட்டணி வைத்துள்ளதாகவும் அதன் மூலம் அதிமுக அரசை கவிழ்க்க திட்டமிட்டுள்ளார் என பரபரப்பான குற்றச்சாட்டை அதிமுக அமைச்சர்கள் கிளப்பி வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை தனியார் ஹோட்டலில் மு.க.ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ரகசியமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக அதிமுக அமைச்சர்கள் மீண்டும் குற்றம்ச்சாட்டி வந்தனர். இதற்கு பதிலளித்த திமுக பொருளாளர் துரைமுருகன் ஒரே ஓட்டலில் தங்குவது என்ன பெருங்குற்றமா? என கேள்வி எழுப்பினார். 

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் 1500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனஎ. அவர்களது போராட்டத்தை ஆதரித்து அங்கு டி.டி.வி.தினகரன் சென்றிருந்தார். அதே நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் அங்கு சென்றார். அப்போது ஒருவரை ஒருவர் பார்க்கும் நிலை உருவானது. இருவரும் சந்தித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு தமிழக அரசியல் கட்சியினரிடையே பரபரப்பான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.