Asianet News TamilAsianet News Tamil

வேலை நியமனம் 300 பேருக்கு... ஆனா ஒருவர்கூடத் தமிழர் இல்லை!! தமிழக இளைஞர்களுக்காக கொந்தளித்த ஸ்டாலின்

தமிழக இளைஞர்கள் விரோத அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin support statements for Tamil Nadu youngsters
Author
Chennai, First Published May 6, 2019, 6:40 PM IST

தமிழக இளைஞர்கள் விரோத அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சமீபத்தில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் ரயில்வே துறை உட்பட பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு திட்டமிட்டே மறுக்கப்பட்டு, வட நாட்டினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பல மடங்கு பெருகிவிட்டது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தமிழக இளைஞர் கண்ணில் சுண்ணாம்பைத் தடவும் நிகழ்வாகும். நூற்றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் அத்தேர்வில் கலந்து கொண்டும், ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை என்று விமர்சித்துள்ள அவர், “ இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை இல்லாத் திண்டாட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பணியிடங்கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு, உள்நோக்கத்தோடு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை போனதோடு மட்டுமில்லாமல் - பாஜகவுடன் கூட்டணியும் வைத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்துள்ளார் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

திமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களான ரயில்வே, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், எல்ஐசி போன்றவற்றில் 90 சதவீதத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கட்டாயமாக்க வேண்டும்" என்றும், "மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழிலும் நடத்தப்பட வேண்டும்" என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. மத்தியில் திமுக கைகாட்டும் அரசு அமைந்தவுடன், இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான "தமிழக இளைஞர்கள் விரோத" அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலைவாய்ப்பில் வஞ்சித்த மத்திய பாஜக அரசுக்கும் விடை கொடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios