இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான் என நான் துணிச்சலோடு உறுதியாக சொல்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நாகர்கோவிலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மேடையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, வீரமணி, பாரிவேந்தர், முத்தரசன், ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் இன்னும் சில வாரங்களில் இந்திய பிரதமர் ராகுல்காந்தி தான். ராகுல்காந்தியின் கையில் இந்தியா ஆரோக்கியமாக இருக்கும். இளம் தலைவர் ராகுல் அவர்களே ஒளிமாயமான இந்தியாவை தாருங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன். 

பிரதமர் மோடி தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளில் வைத்துள்ளார். புதுப்புது உடை அணிந்து, விதவிதமான தொப்பி அணிந்து நாடு நாடாக சுற்றுகிறார் மோடி. பிரதமர் மோடி சொன்னார் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர். ஆனால் இன்று இருக்கக்கூடிய நிலையோ தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சி இந்த மூன்றில் தான் இந்தியாவை பார்கிறோம். கருப்பு பணத்தை ஒழிக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

பிரதமர் மோடி ஒரு துக்ளக் தர்பாரை நடத்திக்கொண்டிருக்கிறார். ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்றார். ஆனால் ரபேல் ஊழல் ஒன்றுபோதாதா என விமர்சனம் செய்தார். இந்த ரபேல் ஊழலை இந்து ராம் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தினார். இதற்காக இந்து ராம் மிரட்டப்படுகிறார். ஆனால் எந்த ஒரு மிரட்டலுக்கும் அஞ்சவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்தால் திமுக மட்டுமல்ல இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அனைத்து கட்சிகளும் இந்து ராம் அவர்களுக்கு பக்கபலமாக இருப்போம் கவலை வேண்டாம் என்றார். 

40-க்கு 40 வெற்றி பெற்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்திப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். காமராசரின் நினைவு திடீரென பிரதமர் மோடிக்கு வந்துள்ளது. வடக்கே படேல் பெயரையும், தெற்கே காமராசர் பெயரையும் சொல்லி ஓட்டுக் கேட்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.