கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும், பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதை வன்மையாக கண்டித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருக்கிறது. இதற்கு, ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது ஏன் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திமுக தலைவர், மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் , ’’கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும், பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு உள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர் கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் சிஇஜி கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது’’ எனத் தெரிவித்துள்ளார்.