மோடி அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக்கட்சி எம்.பிக்கள் டெல்லியில் நடத்த உள்ள போராட்டம் குறித்து பாஜக தமிழக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது முகநூல் பக்கத்தில் கற்பனை உரையாடலை பகிர்ந்துள்ளார். 

அதில், தி மு க தலைவர் ஸ்டாலின் தில்லி போராட்டம் குறித்து ஒரு சிறிய 'கற்பனை' உரையாடல்...
உடன்பிறப்பு : தளபதி, தில்லியில் காஷ்மீர் குறித்த போராட்டத்தை அறிவித்துள்ளீர்களே? அங்கு நிலைமையே வேறு. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு மிக பெரிய ஆதரவு உள்ளதே? அதை எதிர்த்து நீங்கள் பேசினால் மக்களின் ஆதரவு போய்விடுமே.

ஸ்டாலின்: அதெல்லாம் ஒன்றும் ஆகாது. கலைஞர் கற்று கொடுத்தபடி நான் வியூகம் அமைத்துள்ளேன்.

உடன்பிறப்பு : அதற்கில்லை தளபதி, காஷ்மீர் நமது நாட்டின் ஒரு அங்கம். ஆனால், என்றுமே அப்படி இருந்ததில்லை என்று நம் செய்தி தொடர்பாளர் பேசியுள்ள சூழ்நிலையில் அங்கு நீங்கள் இந்தியாவிற்கு எதிராக பேசினால் பிரச்சினை ஆகுமே?

ஸ்டாலின் : கவலை வேண்டாம். பூனை மேல் மதில் பாணியில் நான் பேசுவேன்.

உடன்பிறப்பு : என்ன?

ஸ்டாலின் : ஆமாம். தில்லியில் காஷ்மீர் குறித்து பேசுவதற்கு ஹிந்தி வார்த்தைகளை தமிழ் மொழியில் எழுதி தர சொல்லியிருக்கிறேன்.முகத்தை காட்டமாக வைத்து கொண்டு, "காஷ்மீர் இந்தியா கா ஏக் அங் ஹை, ஓ, துக்கடா துக்கடா நஹி காரேங்கா.மோடி கி ஜெ, அமித் ஷா கி ஜெ", என்று சொல்லி விட்டு தமிழில் "விடமாட்டேன், ஓயமாட்டேன்" என்று முழக்கிமிட்டு உரையை முடித்து கொள்வேன். கவலைப்படாதே உடன்பிறப்பே, வழக்கம் போல் நம் இலக்கை நாம் எட்டி விடுவோம். தமிழ் தொலை காட்சிகளும் "விட மாட்டேன், ஓய மாட்டேன்" என்பதை மட்டுமே ஒளிபரப்பி என்னை போராளியாக சித்தரிக்கும். தேசிய புலனாய்வு திருத்த மசோதாவிற்கு ஆதரவாக டில்லியில் வாக்களித்து விட்டு தமிழகத்தில் அதற்கு எதிராக பேசியதை தமிழகமே கண்டு களித்ததை மறந்து விட்டாயா உடன்பிறப்பே? 2009ல் ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ஒன்றைமணி நேரம் உண்ணாவிரதம் இருந்து தமிழின காவலர் என்று பட்டம் பெற்றதை மறந்து விட்டாயா உடன்பிறப்பே? அதே போல் தான் இதுவும். கவலைப்படாதே. கலைஞரின் வழியில் நானும் . என் வழியில் நீங்களும்.

உடன்பிறப்பு : !!!!!!!!!!’’ என அவர் பதிவிட்டுள்ளார்.