தி.மு.க. போல் அதிர அதிர ஜெயித்த கட்சியுமில்லை, தி.மு.க. போல் அலற அலற தோற்ற கட்சியுமில்லை. அதிலும் கடந்த 2011_ல் ஆட்சியை இழந்த பிறகான ஆறு ஆண்டுகள் மிகப்பெரிய இக்கட்டான காலமாகதான் அமைந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தலில் சறுக்கல், நாடாளுமன்ற தேர்தலில் வழுக்கல், கனிமொழியே திகார் செல்லுமளவுக்கு விஸ்வரூமெடுத்த 2ஜி வழக்கு, தயாளு அம்மாள் வரை நீண்ட விசாரணை, பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட 2016 பொதுதேர்தலிலும் ஆட்சியை நழுவவிட்டது, அழகிரியின் உட்புரட்சி, கருணாநிதியின் உடல் நலிவு என்று எதிர்மறை மேகங்கள் துரத்தி துரத்தி தி.மு.க.மீது துரதிர்ஷ்ட மழையை பொழிகின்றன. 

ஆனாலும் அதையெல்லாம் கடந்தும் ‘நான் மீண்டு(ம்) வருவேன் டா!’ என்று நம்பிக்கை கயிற்றை இறுகப்பற்றியபடி கரைசேர எத்தனித்துக் கொண்டே இருக்கிறது அக்கட்சி. காரணம், அரசியலில் ஜனநாயகம் எனும் மாண்பை தேவையான அளவுக்கேனும் மதிக்கும் இயக்கம் அது. ஒரு தாத்பர்யத்தின் மீது நாட்டமுடையவர்களுக்கு சறுக்ககள் வருவது இயற்கை. ஆனால் அந்த தாத்பர்யத்தின் யதார்த்த கொள்கைகள் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களால் நிச்சயம் அதிலிருந்து மீளமுடியும். தி.மு.க. அதற்கு விதிவிலக்கல்ல. 

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகவும், அதை தி.மு.க பயன்படுத்த தவறுகிறது என்றும்  பலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த சூழல் வெகு வெகு சாதாரணமான சூழ்நிலை. காரணம், சிங்கமென ஜெயலலிதா வீற்றிருந்தால் எதிர்ப்பு அரசியல் செய்யும் தி.மு.க.வுக்கு அது அசாதாரணமான சூழல்.

ஆனால் எடப்பாடியும், பன்னீருமா ஸ்டாலினுக்கு அசாதாரண நெருக்கடியை தந்துவிடுவார்கள்? பேரரசனிடம் மோதி பழக்கப்பட்டுவிட்ட ஸ்டாலினுக்கு இந்த படைத்தளபதிகள் பெரிய சவாலாக இருந்துவிட முடியாதுதான். அதையும் தாண்டி ஸ்டாலின் களமிறங்க காலம் நீட்டிப்பதுதான் அசாதாரணமாக தெரிகிறது. 

எது எப்படியோ! ஏதோ மயக்கத்திலிருந்த தி.மு.க. துள்ளி எழ தேதி குறித்திருக்கிறது. அதுதான் ஜூன் 3. சட்டசபையில் வைரவிழா காணும் கலைஞரின் 94 வது பிறந்த நாளை ஏகபோகமாக கொண்டாடி, பல மாநில முதல்வர்களை, தலைவர்களை அழைத்து நிகழ்வை நடத்தி, தேசிய அரசியலில் தனது இருப்பை அழுத்தமாக காட்டிக் கொள்ள துடிக்கிறது கழகம். 

ஜனாதிபதி தேர்தல், 2ஜி வழக்கில் தீர்ப்பு, உள்ளாட்சி தேர்தல் (ஒருவேளை) போன்றவை அடுத்தடுத்து வரிசை கட்டும் நிலையில் கலைஞரை வைத்து கழகம் திட்டமிடும் இந்த நிகழ்வில் கலைஞர் கலந்து கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால் அவரது பெயரும், சட்டமன்ற சாதனையும் தி.மு.க.வின் எழுச்சிக்கு கைகொடுக்கும் என்று தி.மு.க.வின் கடைசி மட்ட தொண்டனும் நம்புகிறான். 

தங்கள் தலைவனுக்கு மிகப்பெரிய மரியாதையை செய்ய தொண்டன் ஆயிரம் செய்யலாம். ஆனாலும் ‘தமிழ் இனத்தின் முகவரி கலைஞர் 94’ எனும் தலைப்பில் முரசொலி பத்திரிக்கையானது பிறந்தநாள் மலர் மாலை (சிறப்பிதழ்) ஒன்றை வெளியிடுகிறது.

ஜூன் 3_ம் தேதி கழகத்தினரின் கைகளில் தவழ்ப்போகும் அதில் தங்கள் தலைவனின் அரசியல் சாதனைகளை கட்டுரைகள் மற்றும் புகைப்படங்களின் வடிவில் கண்டு தொண்டன் மகிழும் வண்ணம் தயாராகி கொண்டிருக்கிறதாம். இதன் மேற்பார்வை பணியில் முழு மூச்சுடன்  ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின். அதிலிருக்கும் விஷயங்கள் தொண்டனை சிலிர்த்து எழுந்து அரசியல் களத்தில் அசுரத்தனமாக தன்னை சுழலவைக்க தூண்ட வேண்டும் என்று நினைக்கிறார் அவர். 

முரசொலி என்பது கலைஞரின் மூச்சு! முரசொலி சார்பில் வெளியிப்படும் அந்த சிறப்பிதழை கண்டு உளம் மகிழும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி நிற்கவேண்டும் என்பதே ஸ்டாலின் உள்ளிட்ட அவரது உண்மை தொண்டர்களின் எதிர்பார்ப்பு. 
வா தலைவா!