திமுகவில் சலசலப்பை ஏற்படுத்திவிடலாம் என சலங்கை கட்டிக் கொண்டு அழகிரி ஆடிய ஆட்டம் ‘அமைதி’ப் பேரணியுடன் அஸ்தமனமாகிப் போய்விட்டது.

திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஓடிவிட்டன. கடந்த 4 ஆண்டுகளாக அமைதியாக இருந்த அழகிரி, கருணாநிதி மறைந்த உடனேயே குடைச்சல் கொடுக்க தொடங்கினார்.

ஆதங்கம் இருக்கிறது. திமுகவில் என்னை சேர்க்க வேண்டும் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார். ஆனால் அமைதியாக இருந்த ஸ்டாலின் திமுக தலைவராக முடி சூடிக் கொண்டார்.

இதனால் கோபமும் கொந்தளிப்புமாக சென்னையில் செப்டம்பர் 5-ல் கருணாநிதி நினைவிடம் நோக்கிய அமைதிப் பேரணியை பிரமாண்டமாக நடத்தியாக வேண்டும் என மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்துக்கே திமுக முக்கிய நிர்வாகிகள் எவரும் செல்லவில்லை.

திமுகவில் 3வது, 4-வது நிலையில் உள்ள ஒரு சில மதுரை நிர்வாகிகள்தான் அழகிரியுடன் கை கோர்த்தனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் வந்ததாக அழகிரி அடித்துவிட்டார்.

ஆனால் மிக அதிபட்சமாக 8,000 பேர்தான் வந்திருக்க வாய்ப்பு இருப்பதை கூட்டத்தைப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும். தமிழகம் முழுவதும் ஸ்டாலின் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக நிர்வாகிகள் அழகிரியுடன் அணிசேருவார்கள் என அரசியல் பார்வையாளர்கள் ஆரூடம் கூறிவந்தனர்.

அப்படி எந்த ஒரு அதிருப்தியாளரும் திமுகவில் இல்லை என்பதை திட்டவட்டமாக நேற்றைய அழகிரி பேரணியே நிரூபித்துக் காட்டியுள்ளது. சேலம் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் அழகிரியுடன் சேரும் என்று கூட கொளுத்திப் போட்டனர். அப்படி எதுவும் நடக்கவில்லை.

தற்போதைய நிலையில் அழகிரி பக்கம் திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் செல்லத் தயாராக இல்லை என்பது திட்டவட்டமாகிவிட்டது.

கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் தம்முடைய பக்கம் என்கிற அழகிரியின்  கணிப்பு சுத்தமாக எடுபடவில்லை. அழகிரியும் தமக்கு ஆதங்கம் இருக்கிறது; அதை வெளிப்படுத்துவேன் என பேசிய வசனத்தையும் நிறைவேற்றவில்லை. ஆக கடந்த 30 நாட்களாக அழகிரி ஆடி வந்த ஆட்டம்,  அனைத்துமே பரிதாபத்துக்குரியதாக மாறிப்போனது !