ஆட்சியை கவிழ்க்க வேண்டாம் அதுவாக கவிழச் செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது அதிமுக தரப்பில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்து.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சியை கவிழ்த்துவிட வேண்டும் என்கிற முடிவில் ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இதற்காக செந்தில் பாலாஜி மூலமாக அதிமுகவின் 3 எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எல்லாம் சுபமாக முடிந்த நிலையில் இதனை மோப்பம் பிடித்த எடப்பாடி தரப்பு அந்த எம்எல்ஏக்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தது. இதனால் திமுக பக்கம் தாவும் முடிவை அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டனர். 

இதனால், தான் சட்டப்பேரவையில் வேறு வழியே இல்லாமல் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஸ்டாலின் வாபஸ் வாங்கினார். இதன் மூலம் ஆட்சிக்கு வந்த ஆபத்து நீங்கிவிட்டதாக எடப்பாடி தரப்பு நிம்மதி பெரு”மூச்சு விட்டது. திடீரென நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக வாபஸ் வாங்கியது அக்கட்சி தொண்டர்களை அதிர வைத்தது. இது குறித்து விசாரித்த போது, ஆட்சியை கவிழ்த்து திமுக ஆட்சி அமைத்தாலும் கூட மேலும் 2 வருடங்களுக்க மட்டும் தான் திமுக ஆட்சி பொறுப்பில் நீடிக்க முடியும். 

அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலை மீண்டும் எதிர்கொள்ள வேண்டும், இரண்டாண்டுகளில் திமுக அரசு மீது அதிருப்தி எழும் பட்சத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீண்டும் தலைதூக்க வாய்ப்பு வழங்கியதாக போய்விடும். எனவே ஆட்சி அதுவாகவே கலையும் பட்சத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றால் 5 ஆண்டுகள் முழுமையாக திமுக ஆட்சி செய்ய முடியும் என்று ஸ்டாலின் தரப்பு தெரிவித்தது. 

அந்த வகையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை தான் திடீரென திமுக தரப்பு தற்போது வேகப்படுத்துகிறது. நேற்று தலைமை நீதிபதி முன்பு இந்த வழக்கு குறித்து திமுக வழக்கறிஞர்கள் மென்சன் செய்தனர். 

இதனை அடுத்து அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி கூறிவிட்டார். இந்த வழக்கு வேகம் எடுத்த திமுகவிற்கு சாதகமான தீர்ப்பு வரும் பட்சத்தில் பெரும்பான்மை இல்லாத அதிமுக அரசால் நீடிக்க முடியாது, தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தரப்பில் கூறுகிறார்கள்.