சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையில் நடந்த தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசுவின் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொண்ட பாஜக துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், `தமிழக முதல்வராக விரைவில் ஸ்டாலின் பொறுப்பேற்பார்' என்று ஸ்டாலின் முன்னிலையிலேயே பேசியது பா.ஜ.க வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

`அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தமிழக பா.ஜ.க-வில் குரல் எழுப்பியது. இதுகுறித்து விளக்கமளித்த பி.டி.அரசகுமார் `` நீண்டகாலமாக என்னுடன் நட்பில் இருப்பவர் ஸ்டாலின். என்னை எங்கு பார்த்தாலும் நலம் விசாரிப்பவர். தொடர்ந்து அரசியலில் இயங்கிவரும் அவர் ஜனநாயக முறையில் முதலமைச்சராகப் பதவியேற்க உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரின் எண்ணம் வெற்றி பெறும் என்று நாகரிகமான முறையில் பேசினேன். அடுத்த தேர்தலில் அவர்தான் முதல்வர் என்று நான் கூறவில்லை. மற்றபடி இதைத் திட்டமிட்டுப் பேசவில்லை. யதார்த்தமாக வந்த வார்த்தையை சிலர் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்'' எனத் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் நரேந்திரன் பிடி.அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தலைமக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தேசிய தலைமையிடம் இருந்து பதில் வரும் வரை பி.டி.அரசகுமார் கட்சியில் எந்த கூட்டங்கள், டி.வி விவாதங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.