நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றும் அதை கொண்டாட முடியாத மனநிலையில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தமிழகத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. திமுக வேட்பாளர்களை நிறுத்திய 19 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றனர். திமுகவின் சின்னத்தில் போட்டியிட்ட நான்கு பிற கட்சி வேட்பாளர்களும் வெற்றியை பதிவு செய்தனர். 

இதனால் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் பலம் 23-ஆக உயர்ந்தது. மேலும் பாஜக காங்கிரஸ் அடுத்து இந்திய அளவில் அதிக இடங்களை வென்ற கட்சியாக அதிமுக உருவெடுத்தது. இப்படி மிகப்பெரிய சாதனையை திமுக செய்திருந்தாலும் கூட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நேற்று பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. இதற்கு முதல் காரணம் மத்தியில் மீண்டும் மோடி பிரதமராகி விட்டார். 

சட்டமன்ற இடைத் தேர்தலிலும் திமுக வேட்பாளர்களால் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற முடியவில்லை. இடைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் எடப்பாடி அரசு பதவி நீடிப்பதில் பெரிய அளவில் சிக்கல் ஏற்பட போவதில்லை. எனவே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றால் இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். 

அதோடு மட்டுமல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தின்போது கலைஞர் பிறந்தநாள் இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் எனவும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கும் எனவும் ஸ்டாலின் சூளுரைத்து வந்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் அந்த சூளுரையை பொய்யாக்கும் வகையில் அமைந்து விட்டதால் ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் நேற்று நிசப்தமான சூழ்நிலை நிலவியுள்ளது.

இருந்தாலும் திமுகவின் தலைவராக பதவியேற்ற முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றியை பதிவு செய்திருப்பது ஸ்டாலின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமான ஒரு அம்சமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஓரளவு ஆறுதல் அடைந்ததாக எண்ணிக் கொள்ளலாம்.