அதிமுகவின் சூழ்ச்சியை முறியடித்து திமுக ஆட்சி பீடத்தில் நிச்சயமாக ஏறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய கணக்குப் போட்டு காத்திருக்கிறார்.

அவரக்குறிச்சியில் செந்தில் பாலாஜிக்கு பிரச்சாரம் செய்த அவர், ’’எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி மெஜாரிட்டி இல்லாத நிலையில் மைனாரிட்டியாக நடைபெறும் ஆட்சி தான். மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளிலும்  எப்படி வெற்றி பெறுகிறோமோ அதே போல் நடந்து முடிந்த 18 சட்டமன்ற இடைத்தேர்தல், இனி நடைபெற இருக்கிற 4 சட்டமன்றத் தேர்தல் என மொத்தம் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். திமுக ஆட்சி அமையும்.

ஏற்கனவே திமுக கூட்டணியில் 97 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போது வெற்றி பெறும் 22 என்ம்.எல்.ஏக்களையும் சேர்த்தால் 119 பேர் வந்துவிடும். இதனால் 23ம் தேதிக்குப் பிறகு திமுக ஆட்சி அமையும். கருணாநிதியின் மகன் நான். இது ஆளும் கட்சிக்கு நன்றாக தெரியும். அதனால்தான் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்து விடும் என சூழ்ச்சி செய்தார்கள். 3 எம்பி எம்எல்ஏக்கள் பதவியை திடீரென்று பறிக்க விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்கள்.
 
இந்த சூழ்ச்சியை கருணாநிதியின் மகன் நான் அறிந்து கொண்டேன். எனவே சபாநாயகர் மீது எம்எல்ஏக்களாக இருக்கும் நாங்கள் நம்பிக்கை இழந்து இருக்கிறோம். அதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை உங்கள் மீது கொண்டு வருகிறோம் என்று ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தேன். அதனால் அவர்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுக்க முடியாது. நீக்குவதற்காக கடிதம் அனுப்பப்பட்ட எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றம் சென்று முறையிட்டு அதன் வாயிலாக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தடை போட்டுள்ளது உச்சநீதிமன்றம். ஆகவே அவர்கள் போட்ட சூழ்ச்சிக்கு நான் ஒரு ஆப்பு வைத்தேன்’’ என அவர் தெரிவித்தார்.