பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவராக துரைமுருகனிடம் இன்னும் எத்தனை நாளைக்கு பொருளாளர் பதவியை கொடுத்து வைத்திருப்பது என்கிற கேள்வி மூலம் மு.க.ஸ்டாலின் இரண்டு பேர் தொடர்ந்து குழப்பி வருகின்றனர் என்பதுதான் தற்போதைய திமுகவின் ஹாட் டாபிக்.

2006 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் துரைமுருகன். ஆனால் இரண்டே வருடங்களில் அந்த பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. மிகவும் சீனியரான துரைமுருகனிடம் இருந்து ஒரு இலாகா படைக்கப்பட்டது என்பது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் திமுக தலைவரும் முதலமைச்சருமான கருணாநிதியின் நிழலாக இருந்து வந்தவர் துரைமுருகன். 

அப்படி இருந்தும் துரைமுருகனிடம் இருந்து முதலமைச்சர் கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியை பறித்தது என்பது அவரது பொறுப்பற்ற தன்மையினால் தான் என்று அப்போதே பேச்சு எழுந்தது. பொதுவாக உள்ளாட்சித் துறை பொதுப்பணித் துறை போன்ற இலாகாக்கள் தான் அதிக பணப் புழக்கம் இருப்பவை. இந்தப் பதவியில் இருப்பவர்கள் தான் ஆட்சியிலிருக்கும் கட்சியின் கஜானா வாகவும் செயல்படுவார்கள். ஆனால் அந்த காலகட்டத்தில் துரைமுருகன் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிப்பதுடன் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டிலும் அதிமுகவினர் சிலர் பயனடையும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் தான் அப்போது துரைமுருகன் பதவி பறிக்கப்பட்டது. 

அதன் பிறகு டம்மியான சட்டத்துறை அமைச்சராக துரைமுருகன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுகவின் மிக முக்கியப் பதவியான பொருளாளர் பதவி துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மிகப்பெரிய கட்சிகள் கஜானாவை கட்டிக்காக்க வேண்டிய துரைமுருகன் வீட்டிலேயே வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் காட்பாடியில் சுமார் 13 கோடி ரூபாய் அளவிற்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணம் துரைமுருகனின் மகனும் மேலூர் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் உடன் தொடர்பு படுத்தப்பட்டு தேர்தலை ரத்து செய்யப்பட்டது. இப்படி பொருளாளராக இருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளலாமா என்று ஸ்டாலினிடம் அப்போதே பத்த வைக்க ஆரம்பித்தனர். 

அதேசமயம் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே திருவண்ணாமலையில் இருந்து சென்ற பேருந்தில் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபாய் பணம் சிக்கியது. இந்தப் பணமும் கூட திமுகவின் மிக முக்கிய புள்ளியின் ஒருவருடையது தான். ஆனால் இந்த விவகாரத்தில் அந்த முக்கிய புள்ளி தனது பெயர் கூட வெளியே வரவிடாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு விட்டார். இதனைச் சுட்டிக் காட்டித்தான் துரைமுருகனுக்கு எதிராக தற்போது சிலர் ஸ்டாலினை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். 

பொறுப்பில்லாமல் செயல்பட்டு வந்த துரைமுருகன் பேச்சு கடந்த சில நாட்களாக எல்லை மீறி செல்வதாகவும் இதனால் வலைதளங்களில் திமுக கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாவதாகவும் ஸ்டாலினிடம் வத்தி வைக்கும் போக்கு தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு துரைமுருகனுக்கு பதிலாக வேறு ஒருவர் பொருளாளர் பதவியில் நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றனர் திமுகவின் மிக முக்கிய நிர்வாகிகள்.