சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
ஏற்கனவே 5 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத தேக்கநிலையில் இருந்தது . அம்மையார் ஜெயலலிதா தொடர்ந்து ஆட்சிக்கு வந்த போது 9 மாத காலமாக தமிழக எந்த அளவுக்கு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன் பின்னர் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று மறைந்தார்.
தமிழகத்தின் பிரபலமான தலைவர் , முதல்வர் பிரபலமான அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருந்த அமைச்சரோ , அதிகாரிகளோ ஒரு அறிக்கை விடவில்லை.
அண்ணா மருத்துவமனையிலிருந்தபோது அன்றைய சுகாதாரதுறை அமைச்சர் சாதிக்பாட்ஷா , எம்ஜிஆர் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்றைய சுகாதார துறை அமைச்சர் எச்.வி ஹண்டே போன்றொர் அரசின் சார்பில் அறிக்கை அளிக்கத்தனர்.
ஆனால் 75 நாட்கள் மருத்துவமனையிலிருந்த அம்மையார் மறைந்தார். அவர் மறைந்த செய்தியில் கூட ஏகப்பட்ட மர்மம். முதலில் மறைவு செய்தி சொல்லிவிட்டு பின்னர் அது இல்லை என்று கூறி பின்னர் இரவு அவர் உயிருடன் இருப்பதாக இருந்த நேரத்திலேயே ஓபிஎஸ் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றது.
இது ஒரு நிலை, அதன் பின்னர் ஓபிஎஸ் முதல்வராக இருக்கும் போதே அவர் நீக்கப்படுவதாக கூறி சசிகலா முதல்வராக தேர்வு செய்ய கூட்டத்தை கூட்டி முடிவெடுக்கிறார்கள். அதற்கு இரண்டு நாள் கழித்து ஓபிஏஸ் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அரை மணி நேரம் தியானத்தில் அமர்ந்து, பின்னர் தான் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து மிரட்டி கையெழுத்து வாங்கி நீக்கப்பட்டதாக கூறினார்.
நாமெல்லாம் சந்தேகம் எழுப்பியது போக ஓபிஎஸ்சே ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் நினைப்பதை தள்ளிவைக்க முடியாது என்கிறார்.
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் தெரியும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து நடந்த கூத்துக்களை அனைவரும் அறிவோம். அதன் பின்னர் இது பற்றி நாங்கள் கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நடக்கும் இது போன்ற நிலையை பற்றிகூறினோம்.
அதன் பின்னர் கவர்னர் எடப்பாடியை பதவி ஏற்க அழைத்தார். 15 நா ட்கள் பெரும்பான்மையை நிருபிக்க டைம் கொடுத்த நிலையில் இரண்டே நாளில் அவையை கூட்டுகிறார். அதற்கு அழைப்பு வருகிறது. கூவத்தூரிலிருந்து எம்.எல்.ஏக்கள் அடைத்து வைத்திருந்தவர்களை பிணைகைதிகள் போல் அழைத்து வந்தனர்.
இந்த விஷயத்தில் ரகசிய வாக்கெடுப்பை செம்மலை கோரினார். நானும் அதன் நியாயத்தை வலியுறுத்தி பேசினேன். அதன் நியாயத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. அதை தொடர்ந்து நடந்த விவகாரத்தில் சபையை சபாநாயகர் ஒத்தி வைத்துவிட்டு சென்றார்.
அதன் பின்னர் சபாநாயகர் அறைக்கு என்னை அழைத்தார். அங்கு முதல்வர் எடப்பாடி அமர்ந்திருந்தார், அமைச்சர்கள் இருந்தனர். காங்கிரஸ் முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். சபாநாயகர் என்னிடம் சட்டையை கிழிந்திருப்பதை காட்டி நியாயமா என்றார்.
அப்படி ஒன்று நடந்திருக்காது அவ்வாறு நடந்திருந்தால் நியாயமில்லை அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என்றேன். சபையை நடத்துவதை பற்றி கேட்டோம். ரகசிய வாக்கெடுப்புக்கு மறுத்தால் ஒருவாரம் சபையை ஒத்திவைத்து எல்லோரும் தொகுதிக்கு சென்று வந்த பின்னர் சபையை நடத்தலாம் விதியில் இடமிருக்கிறது என்றேன்.
முடியவே முடியாது என்றார். அப்படியானால் எதற்கு அழைக்க வேண்டும் என்று கேட்டு சபைக்கு வந்தோம். அதன் பின்னர் சபையில் எங்களை வெளியேற்றினார். ஒவ்வொருவராக பெயர் சொல்லி அனுப்புங்கள் அதுதான் விதி என்றோம். ஆனால் அவர் ஒட்டு மொத்தமாக வெளியேற்றினார்.
நாங்கள் அங்கேயே அமர்ந்தோம். அப்போது போலீசாரை உள்ளே அழைத்தார்கள். அவர்கள் மாறுவேடத்தில் சட்டசபை மார்ஷல் வேடத்தில் வந்தார்கள். எஸ்பி லெவல் அதிகாரி மார்ஷல் டிரஸ்சில் வந்தார்.
இது குறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி கவர்னரை சென்று சந்தித்து புகார் அளித்தோம். பின்னர் நியாயம் கேட்டு கடற்கரை காந்தி சிலையில் அறவழியில் போராட்டம் நடத்தினோம்.
பினாமி எடப்பாடிக்கு ஆதரவு கொடுத்த எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு செல்ல முடியவில்லை. ஆகவே அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே சசிகலா குடும்பம் தாம் அதனால் தான் மக்கள் அவர்களை எதிர்க்கிறார்கள்.
ஆக , இது திமுக சார்பிலான போராட்டம் அல்ல ஏதோ கட்சியின் சார்பில் நடக்கும் போராட்டம் அல்ல . மோசமான மன்னார் குடி மாஃபியாவுக்கு எதிரான போரட்டத்தில் மாணவர்கள் , இளைஞர்கள் , தொழிலாளர்கள் , பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
நான் திருச்சியில் போராட்டத்தில் கலந்துகொள்கிறேன்.
அரசு மணல் விற்பனையை ஏற்றுகொள்ளுமா என்பதை கேட்ட போது எடப்பாடி எழுந்து சென்று விட்டார். இப்போது கர்நாடகாவில் கைது செய்யப்பட்டவர் அவர் சம்பதியும் இருக்கிறார்?
ஆமாம் அதைத்தான் சொல்கிறேன். அவர்கள் பதவி வெறி பிடித்து அலைகிறார்கள். ஆகவே மணல் குவாரி விஷயத்தில் நாங்கள் அரசு தரப்பை இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் கழக அரசு செயல்படும்.அரசு நடத்துவதில் உறுதியாக இருப்போம்.
திமுக எம்.எல்.ஏக்கள் தான் எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் நாற்காலியில் அமர்வது மேசை நாற்காலியில் உடைப்பது நடந்ததே?
இதற்காகத்தான் நாங்கள் நேரலையாக ஒளிபரப்ப சொல்கிறோம். அவர்கள் கையில் கேமரா இருக்கும் போது அவர்களுக்கு ஏற்றது போல் தான் எடிட் செய்து போடுவார்கள்.
ஒருவாரத்திற்கு பிறகு நடந்திருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு எப்படி இருந்திருக்கும்?
நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றிப்பெற்றிருக்க முடியாது.
உயர்நீதி மன்றத்தில் வழக்கு சாதகமாக இல்லையென்றால் என்ன செய்வீர்கள்?
பார்ப்போம், கிடைக்காவிட்டால் உண்ணாவிரதம் அறிவித்துள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்
சபாநாயகர் உங்கள் மீது ஜாதிய ரீதியான தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளாரே?
அவர் திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்
உங்கள் ஆட்சி காலத்தில் கவர்னரை போய் பார்த்தீர்கள் , ஆளுநர் நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்
நடவடிக்கை எடுப்பது போல் தான் தெரிகிறது.
மத்திய அரசின் நடவடிக்கை எப்படி உள்ளது?
ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு நடத்திவிட்டு திடீரென்று ஸ்லோவாகி விட்டு இப்ப திமுக ஓபிஎஸ் ஆதரவாக இருப்பது போல் பிரச்சனை செய்வது இதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரச்சனை செய்யாமல் வெளிநடப்பு போன்றவற்றை நடத்தி சபையில் எதிர்ப்பை காட்டியிருக்கலாமே?
சபாநாயகர் சபையை ஒத்திவைத்த பின்னர்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தது. ஆனாலும் அது தவறுதான். அதற்காக சபாநாயகரிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டேன். அது தவறு எனபதை ஒத்துகொள்கிறேன். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது எனபதையும் உறுதியளிக்கிறேன்.
வைகோ அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை , அதிமுகவின் மற்ற விவகாரங்கள் எதிலும் கருத்து சொல்லாதவர் சட்டசபை நிகழ்ச்சியில் கருத்து சொல்லியிருக்கிறாரே?
வைகோ ஒரு ஞானி அவரிடம் தான் இது பற்றி கேட்கணும்.
கி.வீரமணி கருணாநிதி இருந்து வழி நடத்தாததே இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க காரணம் என்று கீ.வீரமணி கூறியுள்ளாரே.
கீ.வீரமணி மதிப்பிற்குரியவர் அவரது விமர்சனத்துக்கு விமர்சனம் செய்து அவரது மதிப்பை குறைக்க நான் விரும்ப வில்லை.
சொத்துகுவிப்பு வழக்கில் திமுக தான் தண்டனை வாங்கி கொடுத்தது. சசிகலா தமிழக சிறைக்கு மாற்றப்படுவதில் நடவடிக்கை எடுக்குமா?
உரிய நேரத்தில் எடுப்போம்
சபாநாயகரின் நடவடிக்கை மீது என்ன பதில் நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.?
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டுவரப்போகிறோம். விரைவில் அதை செய்வோம்.
ஒப்பிஎஸ்சுக்கு என்ன அட்வைஸ் சொல்லபோகிறீர்கள்
ஓபிஎஸ் ஜெயலலிதாவால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர். அவருக்கோ அதிமுகவை சார்ந்தவர்களுக்கோ நான் எந்த அட்வைசும் செய்ய போவதில்லை.
திமுக தலைவர் உடல்நிலை எப்படி இருக்கு ?
உங்களுக்கு எல்லாம் தெரியும் அவரது வயது , மூப்பு அடிப்படையில் சில சங்கடங்கள் உள்ளது.சங்கடங்கள் இருக்கும் உபாதைகள் அவருக்கு உள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் டிரக்யோஸ்டமி கருவி போட்டுள்ளது. அதற்காக பேசும் பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் அவர் மீண்டு வருவார்.
எடப்படியின் திட்டங்கள்?
எதுவும் நிறைவேறாது. ரூ.5.லட்சம் கோடி கடன் . விவசாயிகள் நூற்றுக்கணக்கில் வறட்சியால் உயிரிழந்துள்ளனர். ஆகவே எந்த முயற்சியும் இல்லை. ஏகப்பட்ட பிரச்சனை உள்ளது.
உங்களுக்கு போட்டியாக யாரை கருதுகிறீர்கள்
யாரையும் நினைக்கவில்லை, என் கடமையை செய்கிறேன்.
திருநாவுக்கரசர் பற்றிய குற்றச்சாட்டு ?
அவர் அதை மறுத்துள்ளார். பேட்டியை பார்த்துவிட்டுத்தான் வந்தேன்.
உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது
வெளிக்காயம் இல்லை, ஆனால் வலி உள்ளது.உள் காயம் உள்ளது. ஸ்கேன் எடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
