பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாளை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு பேசிய அவர், ’’சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தில் தி.மு.க. சார்பில் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதை பெருமையாக கருதுகிறேன். ஒண்டி வீரன் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர். தலைவர் கருணாநிதி ஆட்சியில் அவருக்கு மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டது.

அருந்ததியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 3½ சதவீத இடஒதுக்கீடு தி.மு.க. தலைவர் கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்டது. அந்த சட்டம் நிறைவேறும்போது தலைவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், துணை முதல்வராக இருந்த நான் சட்டமன்றத்தில் அதை ஏகமனதாக நிறைவேற்றினேன். எனக்கு கிடைத்த பெருமை அது.

2011-ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பால் விலையை 3 முறை உயர்த்தி உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே அ.தி.மு.க. அரசு பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ‘நெஞ்சில் பால் வார்த்தார்’ என்பார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசு பால் விலையை உயர்த்தி மக்கள் வயிற்றில் அடித்துள்ளார்கள். ஆவின் அதிக லாபத்தில் இயங்கி வருகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறி வருகிறார்.

ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவின் நஷ்டத்தில் இயங்கி வருகிறது என கூறுகிறார். முதல்வருக்கும், அமைச்சருக்கும் இடையே முரண்பட்ட கருத்து உள்ளது. இதில் எது உண்மை என்பதை முதலில் விளக்க வேண்டும். நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது எங்கள் முடிவு அறிவிக்கப்படும். தமிழகத்தில் ஊழல், லஞ்சம், கொள்ளை ஆகியவற்றை மூடி மறைக்க மாவட்டங்களை பிரித்து வருகிறார்கள். காஷ்மீர் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிரச்சினை என்றாலும் தி.மு.க. குரல் கொடுக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.