திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு சென்னை பேரணி மூலம் முதல் அக்னி பரீட்சையை வைத்திருக்கிறார் மு.க. அழகிரி. அழகிரியின் சென்னை பேரணியை எப்படி ஸ்டாலின் கையாளாகப் போகிறார் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைந்த சில நாட்களிலேயே ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் மு.க. அழகிரி. ஒரு கட்டத்தில் திமுகவில் இணையவும் தயார்; ஸ்டாலினை தலைவராக ஏற்கவும் தயார் எனவும் கூட அழகிரி கூறியிருந்தார்.

ஆனால் அழகிரி தரப்பை முழுமையாக ஸ்டாலின் குடும்பம் நிராகரித்து வருகிறது. இதனால் தமது பலத்தை நிரூபிக்க கருணாநிதி மறைந்த 30-வது நாளான இன்று சென்னையில் பேரணியை நடத்துவதாக அறிவித்தார் அழகிரி.

இப்பேரணியில் கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் அனைவரும் பங்கேற்பார்கள்; சுமார் 1 லட்சம் தொண்டர்கள் திரளுவார்கள் என அழகிரி தரப்பு கூறி வந்தது. இந்த நிலையில் அழகிரியை சென்னையில் வரவேற்ற வேளச்சேரி கிழக்கு பகுதி திமுக செயலாளர் ரவியை சஸ்பென்ட் செய்தது திமுக தலைமை.

தற்போது அழகிரி அறிவித்த அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திமுக கொடியுடன் பங்கேற்றுள்ளனர். இந்த அமைதிப் பேரணி விவகாரத்தை ஸ்டாலின் எப்படி கையாளப் போகிறார் என்பதை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

வேளச்சேரி ரவியை நீக்கியது போல அழகிரி ஆதரவாளர்களை கூண்டோடு களையெடுப்பாரா ஸ்டாலின்? அல்லது இதை பெரிதுபடுத்தாமல் தமக்கே உரிய பாணியில் அமைதி காப்பாரா ஸ்டாலின்? என்பதுதான் திமுகவின் ஹாட் டாபிக். 

அதே நேரத்தில் ஸ்டாலின் தரப்போ, அழகிரி பேரணியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் என கருதுகிறதாம். அத்துடன் அழகிரியுடன் கை கோர்க்கும் சில நிர்வாகிகள் மீது மட்டும் பெயருக்கு இப்போது நடவடிக்கை எடுக்கலாம் என திட்டமிட்டுள்ளதாம்.

அழகிரி வைத்திருக்கும் இந்த அக்னி பரீட்சையில் பாஸ் ஆவாரா ஸ்டாலின் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.