கருணாநிதிக்காக அழகிரி நடத்த உள்ள இரங்கல் பேரணி நாளை சென்னையில் வைத்து நடக்க இருக்கிறது. தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கு பேரணியாகவே இது கருதப்படுகிறது. 

அதிலும் குறிப்பாக திமுக அரசியல் வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான நாள். மறைந்த திமுக தலைவருக்கு அவரது மகனும் , கட்சியின் முன்னாள் முக்கிய உறுப்பினருமான அழகிரி நடத்த உள்ள இரங்கல் பேரணி. இந்த பேரணிக்காக நேற்றே மதுரையில் இருந்து சென்னைக்கு வருகை தந்திருக்கிறார் அழகிரி. எப்படியும் ஒரு லட்சம் பேராவது இந்த பேரணியில் பங்கு பெறுவர் என அவர் முன்னரே தெரிவித்திருந்தார். 

நாளைய தினம் கலைஞருக்காக அழகிரி நடத்த போகும் இந்த பேரணி இவ்வளவு முக்கியத்துவம் பெற காரணம், இனி அரசியலில் அழகிரி யார்? என்பதற்கான அடையாளத்தை தரப்போகும் பேரணி இது என்பதால் தான். ஆரம்பத்தில் இந்த பேரணி குறித்து ஆவேசமாக அறிவித்து விட்டாலும், பின்னர் இந்த பேரணியை நடத்துவதா வேண்டாமா ? என யோசனையில் தான் இருந்தார் அழகிரி. ஸ்டாலின் திமுக தலைவராக பதவி ஏற்ற போது கூட, தானும் அவரை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்றும் , தன்னை கட்சியில் மீண்டும் இணைத்து கொண்டால், கட்சிக்காக பாடு படுவேன் என்றும் கூறி இருந்தார்.


ஆனால் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த வித பதிலும் அழகிரிக்கு வரவில்லை. ஆரம்பத்தில் அழகிரி திமுக உடையும் என பேசிய போதும் சரி, பேரணி குறித்து அறிவித்த போதும் சரி, இப்போதும் சரி ஸ்டாலின் அவர் நிலையில் இருந்து மாறாமல் அப்படியே தான் இருக்கிறார். இது அழகிரியின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 

இதனால் இந்த பேரணியை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தி காட்ட வேண்டும் என்பதில் முழு முனைப்புடன் இறங்கி இருக்கிறார். 

இதில் சென்னை விமான நிலையத்திற்கு நேற்று அழகிரி வந்திறங்கிய போதே அழகிரி ஆதரவாளர்கள் யார்? யார்? என கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர துவங்கி இருக்கிறது. அவருக்கு விமான நிலையத்தில் வைத்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்திருக்கும் அவரது ஆதரவாளர்கள். தொடர்ந்து தங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் அவருக்கு தெரிவித்திருக்கின்றனர்.

தென் சென்னை மேற்கு மாவட்டம், வேளச்சேரி பகுதியின் திமுக செயலாளரான மு.ரவி, அழகிரியை சந்தித்து தனது ஆதரவை அளித்ததுடன் பத்திரிக்கையாளர்களிடமும் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியின் போது மு.ரவி தன் சார்பில் 25 ஆயிரம் தொண்டர்களுடன் , அழகிரி நடத்த உள்ள இந்த பேரணியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இன்னும் 75 ஆயிரம் பேர் தானே அவர்களும் அழகிரி குரலுக்கு வந்துவிட மாட்டார்களா என்ன?

இந்த முறை அழகிரியின் வரவின் போது எல்லா இடங்களிலுமே அவரின் ஆதரவாளர்களின் கூட்டம் நிரம்பி இருக்கிறது. 

கோபாலபுரம் வீட்டிற்கு அழகிரி சென்ற போது கூட அங்கும் அவரது ஆதரவாளர்களின் கூட்டம் நிறைந்திருந்திருக்கிறது. அங்கு சென்று , கலைஞரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அழகிரி , தன் தாயார் தயாளு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகு பேரணி குறித்து விவரங்களை கேட்டு அறிந்து கொண்ட அவர், வெளியில் ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார். இம்முறை ஸ்டாலினை மீண்டும் சந்திக்கும் நோக்கம் அழகிரிக்கு இல்லை என்றே இதிலிருந்து தெரிகிறது. அவரது ஆதரவாளர்களும் அவ்வாறே தெரிவித்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து நாளை நடக்க உள்ள பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருக்கும் தொண்டர்களை தங்க வைப்பதற்கக செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. 

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள்  எம்.எல்.ஏ.,க்கள் போன்றோர் அழகிரிக்கு பக்கபலமாக நின்று பேரணிக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். நாளைய தினம் அஞ்சா நெஞ்சரின் அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தினம் என்பதால் பரப்பரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றனர் அவரின் அன்பு தம்பிகள்.