திமுக மக்களவை தொகுதியில் தென்மாவட்டங்களில் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் மற்ற தொகுதிகளில் மண்ணைக் கவ்வும் எனக் கணித்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. 

மு.க.அழகிரி வெளியில் மூச்சுவிடாமல் இருந்தாலும், உள்ளுக்குள் தனது நண்பர்களோடு உட்கார்ந்து அடிக்கடி அரசியல் பேசுகிறாராம்.
இன்னும் சிலநாள்களில், அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றிச் சொல்கிறேன்” என்று திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு அறிவித்தார் மு.க.அழகிரி. அதன் பின் மதுரையில் இருந்து திரட்டி வரப்பட்ட தனது ஆதரவாளர்களை வைத்து சென்னையில் ஒரு பேரணி நடத்தினார். பெரியதாக எடுபடவில்லை.

அழகிரியின் பிறந்தநாளான கடந்த ஜனவரி 30-க்குப் பிறகு, பிப்ரவரி புரட்சி வெடிக்கும் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தார்கள். மக்களவை தேர்தலுக்கு அண்ணன் தன் நிலைப்பாட்டை கூறிவிடுவார் என்றார்கள். இதோ இன்னும் ஓரிரு நாட்களே இருக்கிறது. இதனால், அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள்.

ஆனாலும் திமுக வெற்றியை பற்றி தனது நெருங்கிய ஆதரவாளர்களிடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார் மு.க.அழகிரி. அப்போது ஆதரவாளர்களிடம் திமுக வெற்றி குறித்து பேசிய அழகிரி ‘’மீடியாக்காரர்களை அனுசரித்து ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் கைக்குள் வைத்துக் கொண்டு ‘திமுகவே பெருவாரியாக ஜெயிக்கும்’னு பேச வைக்கிறார்கள்.

அவைகளெல்லாம் கருத்து கணிப்புகள் அல்ல. கருத்து திணிப்புகள். பணம் கொடுத்து தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லச் சொல்லுகிறார்கள்’  போன தேர்தலில் சந்தித்த அதே முடிவைத்தான் வரும் தேர்தலிலும் திமுக சந்திக்கும். உண்மை நிலவரம் என்னன்னு அவங்களுக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து தென் மாவட்டங்களில் தூத்துக்குடியும், திருநெல்வேலியும்தான் திமுக கூட்டணி ஜெயிக்கும். மத்த இடங்களில் மண்ணை கவ்வப் போகிறது பாருங்கள்’’ என ஆரூடம் சொல்கிறாராம் மு.க.அழகிரி.