திமுகவிலிருந்து நீக்கப்பட்ட  அழகிரி கலைஞர் மறைவுக்கு பிறகு போர்க்கொடி தூக்கினார். ஒரு லட்சம் பேரைத் திரட்டி  மெரினாவை அலற வைக்கப்போகிறேன். அடுத்த தலைவர் நான் தான் என அலப்பறையைக்  கூட்டி வந்தார். அழகிரியின் இந்த அலட்டல்களை தி.மு.கவில்  யாருமே சரியாக கண்டுகொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மூலமாக நடைபெற்ற எந்த பேச்சுவார்த்தையின் முடிவும் அழகிரிக்கு சாதகமாக இல்லை. இதனால் கலைஞர் நினைவிடம் சென்று கலகத்தை ஆரம்பித்தார் அழகிரி. 

கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். வரும் 5ம் தேதி என் பலம் தெரியும். பேரணியின் பின் என்னுடைய பலம் எல்லோருக்கும் தெரியும். பேரணி மிகவும் பெரிய அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது நாளுக்கு நாள் ஒரு திமுக தலைமைக்கு எச்சரிக்கையை விடும் விதமாக பேட்டி கொடுத்து வந்தார்.

ஆனால் அழகிரிக்கு தி.மு.கவினர் மத்தியில் துளியளவும் ஆதரவு இல்லை. இதனால் மதுரை சென்று ஆதரவாளர்களை திரட்டும் பணியில் அழகிரி ஈடுபட்டுள்ளார். முதல் நாள் மதுரை ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். மொத்தமாக 300 பேர் கூட வராத நிலையில் ஏராளமான காலி சேர்கள் அழகிரியின் தற்போதைய செல்வாக்கை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து விருதுநகர், தேனி சுற்றுவட்டார மாவட்ட ஆதரவாளர்களை அழகிரி 5 வது நாளாக சந்தித்தார். அப்போதும் கூட அழகிரி எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. இதனால் அப்செட்டான அழகிரி  வழக்கமான தனது அதிரடி பதில்களை விட்டுவிட்டு நிதானமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்பு விழா நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்திருக்கிறார் அழகிரி. அவரைப் பார்க்க வருவதாகச் சொன்ன பலரும், வராமல் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்களாம். இப்படியே போனால், செப்டம்பர் 5ஆம் தேதி எதை நம்பி, யாரை நம்பிக் கூட்டம் நடத்துவது? ஊர்வலம் போவது? கூட்டம் இல்லாமல் போய் அசிங்கப்படுவதைவிட, கூட்டத்தை ஒத்தி வெச்சிடலாமா? மீண்டும் ஸ்டாலினுடன் சேர்வது குறித்து ஆள் விட்டு பேசலாமா? என கூட ஆலோசனை நடத்தியிருக்கிறார் அழகிரி.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம், கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும், கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை. இதற்கு என் மகனே பதில் அளித்துவிட்டார். ஆனாலும் அவர்கள் இதை பற்றி யோசிக்கவில்லை.  என கூறியுள்ளார்.

கலைஞர் மறைந்ததிலிருந்து பல்வேறு வகையில் குடைச்சல்கள் கொடுத்து வந்த அழகிரிக்கு  திமுக தரப்பிலிருந்து எந்தவித ரியாக்ஷனும் இல்லாததால், சமாதனாமாகப் போக இப்படி ஒரு பேட்டியை கொடுத்துள்ளார் அழகிரி.  அழகிரியின் இந்த பேட்டியை அடுத்து திமுக தரப்பிலிருந்து என்ன பதில் வருமென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.