இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து  தலைமைச் செயலகத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான  தமிமுன் அன்சாரி  தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் .  2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் சட்டபேரையில் நடைபெற்று வருகிறது .  அதற்கான கூட்டம் இன்று காலை  தொடங்கியது அதில் கலந்து கொண்ட திமுக , காங்கிரஸ் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் என்ஆர்பி குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர் . 

அதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை என்றார்,   அதேபோல தேசிய குடிமக்கள் பதிவேடு ,  குடியுரிமை சட்டம் உள்ளிட்டவைகள் குறித்து தமிழக அரசு எழுப்பியுள்ள  சந்தேகங்களுக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும் அவர் கூறினார் .  மேலும் இது குறித்து  தொடர்ந்து பேசிய அவர் ,  

சிஏஏ,  என்பிஆர் , என்ஆர்சிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்  நிறைவேற்றினால் அது மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தை கட்டுப்படுத்தாது ,  நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் அது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாகிவிடும்  என்றும்  கூறினார் . அமைச்சரின் இந்த பதிலை கண்டித்த திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர் . 

 இந்நிலையில்  அமைச்சரின் இந்த பதிலை கண்டித்து அவையில் முழக்கமிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் ,  நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி ,   சட்டமன்ற வளாகத்தில் தரையில்  அமர்ந்து தர்ணாவில்  ஈடுபட்டுவருகிறார் .  தமிழக அரசு , மத்திய அரசை கண்டித்து அவர் முழுக்கமிட்டார்,  பீகார் அரசுக்கு இருக்கும் துணிச்சல்கூட தமிழக அரசுக்கு இல்லையா என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தி அவர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து அங்கு வந்த போலீசார் வலுக்கட்டாயமாக அவரை அப்புறப்படுத்த முயன்றனர் ஆனால் அன்சாரி எதிர்ப்பு தெரிவித்ததால் பின்னர் அவருக்கு ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கினர், இதனால்  அவர் தர்ணாவை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில்  செய்தியாளர்களிடம்  பேசிய அன்சாரி ,  அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டங்கள்,  இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரானது .  

இது அரசியல் சட்டத்திற்கும் எதிரானது,  தமிழக அரசின் தான்தோன்றித்தனமான பதிலை கண்டித்து சட்டத்தின் வழியில்,   ஜனநாயக வழியில் கேள்வி எழுப்பியதற்காக, போராடியதற்காக  போலீசார் என்னை கைது செய்ய முயற்சிக்கின்றனர், இதற்கெல்லாம் ஒருபோதும் அஞ்சமாட்டேன்,  எத்தனை அடக்குமுறைகள் வந்தலும் மக்களுக்கான என் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்தார் .