கொரானா பாதிப்பு காரணமாக வேலைக்கு செல்லமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு  மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும் என  மஜக பொதுச் செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள் விடுத்துள்ளார்.  உலகையே நிலைகுலைய வைத்திருக்கிறது கொரணா வைரஸ் நோய். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளையும், நிதி உதவிகளையும்வழங்கி வருகின்றன.  

மக்கள் ஓரிடத்தில் குழுமக் கூடாது என்பதால், சிறு குறு தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. கூலித் தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், சிறு கடை வணிகர்கள், வாடகை கார் ஒட்டுனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோர் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதை உணர்ந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகள் நிவாரண உதவிகளையும்,  நிதி உதவிகளையும் மக்களுக்கு அறிவித்துள்ளன. இவற்றை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவதுடன், ஒரு ரேஷன் அட்டைக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியாகவும் வழங்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக்கேட்டுக் கொள்கிறோம். 

இது எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத நிலையில், இதனை ஒழிக்க பொதுமக்களின் பேராதரவு அவசியமாகும். அப்படியெனில் , வருவாய் இழப்பை சந்திக்கும் மக்களின் இன்னல்களை போக்குவது மத்திய - மாநில அரசுகளின் கடமையாகும்.  இவ்விஷயத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
என அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.