இன்றைய அதிமுக தலைமை அதையெல்லாம் மறந்து, இச்சட்டங்களை ஆதரித்துள்ளது. தங்கள் தலைமையின் இத்தகைய அணுகுமுறையை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. அவர்கள்தான் களத்தில் மக்களை சந்திக்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் ஜமாத்துல் உலமா சார்பில் மத்திய அரசின் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய மஜக பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, நாடெங்கிலும் மக்கள் போராட்டம் அமைதியாகவும், எழுச்சியாகவும் நடைப்பெற்று வருகிறது. இதை திட்டமிட்டு குலைக்க சிலர் நினைக்கிறார்கள். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸ் கண்ணெதிரிலேயே கோபால் என்பவர் துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை காயப்படுத்தியுள்ளார். அவரை கைது செய்த காவல்துறை அவர் 2002 ல் பிறந்தவர் என்பதால் அவர மைனர் என கூறி அவரை தப்பிக்க வழி செய்கிறது.
அவரது தந்தை 2000-ல் இறந்து விட்டதாக ஆவணங்கள் கூறுகிறது. அப்படியெனில் எது உண்மை? நேற்று 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஷாஹின் பாத்தில் அமைதியாக காத்திருப்பு போராட்டம் நடத்தும் மக்கள் மீது ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இவர்களுக்கு பின்னால் இருக்கும் சக்தி எது? துப்பாக்கிகள் எங்கிருந்து கிடைக்கிறது? கள்ள துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைகள் எங்கு உள்ளது? முகநூலில் கருத்து பதிபவர்களை சுற்றி வளைக்கும் NIA, ஏன் அங்கு இதுவரை செல்ல வில்லை? இத்தனை நடந்தும் இதில் உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்ப்பது நியாயமா? இவ்வளவு போராட்டங்களையும் கண்ட பிறகும் மத்திய அரசு பிடிவாதம் காட்டலாமா?
இந்து, முஸ்லிம் மக்கள் ஒன்றாக நின்று போராடும் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் இது.இதில் பிராமண சமுதாய சகோதர, சகோதரிகளும் இப்போது களமிறங்கி இச்சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள். பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து போராடுகிறார்கள். கிரித்தவ, சீக்கிய மற்றும் தலித் சமூகங்களின் அறிவுஜீவிகள் இதை பல இடங்களில் வழிநடத்துகிறார்கள். இதையெல்லாம் மத்திய அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. சிஏஏ சட்டம் என்பது ஈழத் தமிழர்களை புறக்கணிக்க கூடியது . மத அடிப்படையில் குடியுரிமை வழங்குவது தவறு என 2014 -ல் பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெயலலிதா அம்மா அவர்கள் எச்சரித்தார்கள்.
ஈழத் தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்கள் நிதி மற்றும் ஆயுதம் கொடுத்து உதவினார். இன்றைய அதிமுக தலைமை அதையெல்லாம் மறந்து, இச்சட்டங்களை ஆதரித்துள்ளது. தங்கள் தலைமையின் இத்தகைய அணுகுமுறையை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வருகிறார். அவரது பேச்சுகள் அதிமுக-வின் கொள்கைகளுக்கே எதிரானது. அவர் கலவரங்களை தூண்டிவிடுவதை இனியும் அனுமதிக்க முடியாது.
அவர் பால்வளத்துறை அமைச்சர். அவருக்கு அமலாபாலுக்கும், ஆவின் பாலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாது. எல்லாம் தெரிந்தது போல பேசும் மூளை வீங்கி அவர்.அவரை தமிழக அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அமைச்சர் பொறுப்பில் உள்ளவர் பொறுப்பற்று பேசுகிறார். இது பெரியார், அண்ணா, காமராஜர், தாத்தா இரட்டை மலை சீனிவாசனார், பசும்பொன் தேவர், காயிதே மில்லத், கோவை செழியன், ராமசாமி படையாச்சியார் போன்ற நல்ல தலைவர்கள் பிறந்த மண்ணில் கலவரத்தை தூண்டுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Feb 3, 2020, 3:58 PM IST