கோவா சர்வதேச திரைப்பட விழாவின் பொன்விழாவை முன்னிட்டு ரஜினிக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூபிளி எனும் விருது அளிக்கப்பட்டது. அதாவது கோவா திரைப்பட விழாவின் 50வது ஆண்டு பொன்விழா ஐகான் ரஜினி என்று அங்கீகரித்திருந்தது மத்திய அரசு. இந்த விழாவை நடத்துவது மத்திய அரசு என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. விருது கொடுத்ததை விட விருது கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்து அங்கு ஒளிபரப்பான காட்சித் தொகுப்பு தான் பரபரப்பானது.

ரஜினியை எவ்வளவு தூரம் புகழ முடியுமோ அவ்வளவு தூரம் புகழ்ந்து அந்த காட்சித் தொகுப்பு ஒளிபரப்பானது. ஒரு கட்டத்தில் ரஜினியை கடவுள் என்று கூட அந்த காட்சித் தொகுப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். அதோடு மட்டும் அல்லாமல் ரஜினி விருது வாங்க மேடை ஏறிய போது ஒட்டு மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட ரஜினி, தன்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு அவர்களின் தமிழ் மொழியிலேயே நன்றி தெரிவித்தார்.

இந்த நிலையில் விருதை வாங்கிவிட்டு அன்று இரவே ரஜினி சென்னை திரும்ப டிக்கெட் போடப்பட்டிருந்தது. ஆனால் விருது விழாவில் கிடைத்த உற்சாகம் ரஜினியை அங்கு இரவு தங்க வைத்துவிட்டது. மேலும் விழாவிற்கு வந்திருந்த விஐபிக்கள் அனைவருமே ரஜினியை தனித்தனியாக சந்தித்து பேசினர். கோவாவில் இருந்து ரஜினி விடைபெற்ற போது அவர் தங்கியிருந்த தாஜ் ஓட்டலின் ஒட்டு மொத்த ஊழியர்களும் திரண்டு வந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இப்படி உணர்ச்சிப் பெருக்குடன் கோவா விழா முடிவடைந்த நிலையில், ரஜினி அரசியல் கட்சி தொடர்பாக மிகத் தீர்மான முடிவில் இருப்பதை அவரது பேட்டி காண்பிடித்தது. மேலும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டி என்பதை தன்னையும் மறந்து ரஜினி, அதிசயம், அற்புதம் என்று கூறியிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மேலும் ரஜினி தமிழ் மக்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவரது பேட்டியில் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் ரஜினி கூறிய அதிசயம், அற்புதம் என்கிற வார்த்தை கடந்த முறை அவர் எடப்பாடி பழனிசாமிக்கு பயன்படுத்தியதாகும். அந்த வார்த்தைகள் அதிமுக தரப்பில் இருந்து நிறைய எதிர்மறை கருத்துகளை வெளிக் கொண்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் ரஜினி அதே வார்த்தையை பயன்படுத்தியிருப்பது அதிமுக தரப்பை மேலும் சீண்டத்தான் என்கிறார்கள். அவர் எதிர்பார்த்தது போலவே முதலமைச்சர் எடப்பாடியாரும் தூத்துக்குடியில் பேசியுள்ளார். வழக்கமாக ரஜினிக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழிக்கும் அவரே, கூட 2021ல் அவர் அதிசயம் நிகழும் என்று கூறியிருப்பது மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதைத்தான் என்று கூறியுள்ளார்.

இப்படி அரசியல் களத்தை ரஜினி தினம் தினம் பரபரப்பாக்குவது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்கிறது.