அதிமுகவில் இருந்து விலகி டி.டி.வி.தினகரனுடன் சென்ற கரூர் செந்தில் பாலாஜி,  அதன் பின்னர் திமுகவில் இணைந்தார். இதையடுத்து அவர் ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்த அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக-அதிமுக-அமமுக என மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. அப்போது அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், இந்த தேர்தலில் செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க  செய்வேன் என்றும்,  இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் சவால் விடுத்தார்.

இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் வி செந்தில் பாலாஜி 37,824  வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, எனக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாய்ப்பளித்த ஸ்டாலினுக்கு  இந்த வெற்றியை காணிக்கை ஆக்குவதாக தெரிவித்தார்.

என்னை வெற்றிபெறச் செய்த அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு என்றும் நான் விசுவாசமாக இருப்பேன் எனவும் , இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கழக நிர்வாகிகளுக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

என்னை டெபாசிட் இழக்க  செய்வேன்,  இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என கூறிய அதிமுக அமைச்சர் எப்போது ராஜினாமா செய்வார் என கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடர்ந்து விரைவில் கரூர் சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் வரும் பட்சத்தில் தளபதி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெற பாடுபடுவோம் என கூறினார்.