ops with ministers

ஓபிஎஸ்ம் அமைச்ச்ர் ராஜேந்திர பாலாஜியும் விமான பயணத்தின்போது சந்தித்து ரகசிய தகவல்களை பறிமாறிக் கொண்டதாக வெளியான தகவல் தினகரன் தரப்பை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சசிகலாவை ஆதரித்தனர். ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பினர் காய் நகர்த்தி வருகின்றனர்.

சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் தினகரனின் நடவடிக்கைகள் ஒரு சில அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும் பிடிக்காமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 எம்எல்ஏக்கள் அணி தாவினாலே எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழ்ந்து விடும். இந்நிலையில் ஒரு சில அதிமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் தரப்பினருடன் நெருக்கம் காட்டி வருவது, சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

நேற்று சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த செம்மலையுடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோர் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்,

இதேபோன்று மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த ஓபிஎஸ்ம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது, ஓபிஎஸ் அணிக்கு வர தான் தயாராக உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவை அளித்தவுடன் 5 எம்எல்எக்களுடன் வருவதாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ்க்கு கிடைத்தால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது