இன்று காலை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தும் ஆலோசனையில் ஈடுபட்டனர் . பின்னர் மீண்டும் அவர்கள் துணை முதலமைச்சரின் இல்லத்தில் ஆலோசணையில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலமைச்சர், துணை முதலமைச்சர் என மாறி மாறி அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுதொடர்பாக அமைச்சர்கள்  மாறி மாறி கருத்து கூறிய நிலையில் கடந்த  சில நாட்களாக அதிமுக வட்டாரத்தில் அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தையொட்டி செயின் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.  பின்னர் விழா நிகழ்ச்சி முடிந்ததும், தலைமைச் செயலகத்தில் திடீரென அவசரமாக 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள், அமைச்சர் ஜெயக்குமார் அறையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  பின்னர் அவர்கள் அங்கிருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று அங்கு அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். 

இதில் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, சி.வி சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. பின்னர் அங்கு ஆலோசனை முடித்த அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்த  முதலமைச்சர் பழனிசாமியை  சந்தித்து அவருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  தற்போது முதலமைச்சருடன் நடைபெற்றுவந்த ஆலோசனையும் நிறைவுற்றுள்ளது.முதலமைச்சர் பழனிசாமியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நீடித்த நிலையில், அந்த கூட்டமும்  நிறைவுற்ற நிலையில் சில அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆலோசனையின் முடிவில் அமைச்சர்கள்  செய்தியாளர்களை சந்திக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கவில்லை.

முதல்வருடன் ஆலோசனை நடத்திய நிலையில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோர் மீண்டும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். துணை முதலமைச்சர், முதலமைச்சர் என மாறிமாறி  மூத்த அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவது, அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.