பேசிப் பேசியே வளர்ந்தவைதான் திராவிட இயக்கங்கள். மக்களை வளைக்கும் பேச்சுத் தந்திரத்தால் மாநிலத்தையே ஆளும் அதிகாரத்தையும் பிடித்தார்கள்.

ஆனால் அதே ‘பேச்சு’தான் இன்று திராவிட வி.ஐ.பி.க்களின் சரிவுக்கும் காரணமாகி இருக்கிறது. ஆட்சியே பறிபோகுமளவுக்கு கொண்டுபோய் நிறுத்திவிடுமோ!? என்று அஞ்சுகிற அளவுக்கு இந்த விவகாரம் போய்க் கொண்டிருக்கிறது. காரணம், இன்னும் சில அமைச்சர்களின் ‘அந்த’ விவகாரம் பற்றிய ஆடியோ ஆதாரங்கள் உள்ளது! என்று வெற்றிவேல் கொளுத்திப் போட்டிருப்பதால்தான். 

வெற்றிவேலின் வார்த்தைகளை ‘இந்தாளு டுமீல் பேர்வழி’ என்று கடந்து போய்விட முடியாது. காரணம், சொல்லி அடிப்பதில் தானொரு கில்லி! என்று நிரூபித்திருக்கிறார் வெற்றி. இதனால்தான் அடுத்தடுத்து மாண்புமிகுக்களின் மன்மத மர்மங்களாய் வெளி வரத்துவங்குமோ? என்று அரண்டு கிடக்கிறதாம் ஆளும் வட்டாரம். 

சூழல் இப்படி இருக்கையில்,  நெருப்பை பற்ற வைத்த தினகரன் அணியை சீண்ட மனமில்லாமல் ஏனோ தி.மு.க. மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ’தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி தி.மு.க. தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.’ என்று பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார். 

இது தி.மு.க.வை சற்றே கலங்க வைத்தாலும் கூட தேவையில்லாமல் பாண்டி தங்கள் மீது பாய்வதன் பின்னணி என்ன? என்றபடியே அவரது ஜாதகத்தை தோண்டத் துவங்கியுள்ளன.ஆக அ.தி.மு.க. பெரும் புள்ளிகள் மீது அ.ம.மு.க.வும், தி.மு.க. பெரும்புள்ளிகள் மீது அ.தி.மு.க.வுமாக இப்படி முக்கோண வடிவில் நின்று ஒருவர் மீது ஒருவர் ‘பாலியல் புகார்’ திராவகத்தை ஊற்ற தயாராகி இருப்பது மக்கள் மத்தியில் இரு பெரும் கழகங்களின் மீதும் மிகப்பெரிய அவ நம்பிக்கையை கிளப்பி விட்டிருக்கிறது. 

திராவிட ஆலமரத்தின் வேரில் இந்த ஆபாச புகார்கள் திராவகமாய் பாய்ந்து அரிக்கின்றன!  என்பதில் துளியும் மறுப்பில்லை. திராவிடத்தை சரிக்க துடிக்கும் கட்சிகளும், அமைப்புகளும் இந்த சூழ்நிலையை கைகட்டியும், கை தட்டியும் ரசிக்கின்றன.