ஆர்கே நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்ட சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரன், இரட்டை இலை சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். அப்போது, சுகேஷ் சந்திரா என்பவரை அணுகி, ரூ.1.5 கோடி லஞ்சம் கொடுத்ததாக டிடிவி.தினகரன் மீது புகார் எழுந்தது.

இதுகுறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசில், தலைமை தேர்தல் ஆணையம் புகார் செய்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய சென்னை விரைந்துள்ளனர். இச்சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், டிடிவி.தினகரன் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க சென்றுள்ளார். அவர், இன்று இரவு சென்னை திரும்புவார் என்றும், நாளை காலை டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி கைது செய்யலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தலைமையில், டிடிவி.தினகரன் மீது டெல்லி போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு குறித்து அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

இதில், டிடிவி.தினகரனை போலீசார் கைது செய்யாமல், நேரடியாக கோர்ட்டுக்கு சென்று, வழக்கை சந்திப்பது குறித்து பேசப்படுவதாக தெரியவருகிறது.